2013-06-25 16:05:07

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட ஜெர்மன் இளையோர்


ஜூன்,25,2013.ஜெர்மனியில் கடந்த பத்தாண்டுகளில் புகைப்பிடிக்கும் பழக்கம் இளையோரிடையே பாதியாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டில் 12 மற்றும் 17 வயதுடைய ஜெர்மனியர்களில் 27.5 விழுக்காட்டினர் புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். இவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 12 விழுக்காடு குறைந்துவிட்டது என்று நலவாழ்வு கல்வி கூட்டமைப்பு மையத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
இப்புதனன்று அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இளையோரின் சராசரி புகைப்பிடிக்கும் வயது 13.6லிருந்து 14.4ஆக உயர்ந்துள்ளது. 25 வயதுக்குட்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கினர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர்.
விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று நலவாழ்வு கல்விக் கூட்டமைப்பு மையத்தின் தலைவர் எலிசபெத் பாட் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்







All the contents on this site are copyrighted ©.