2013-06-25 15:53:35

சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழைரீதி பேராயம் ஆழ்ந்த அனுதாபம்


ஜூன்,25,2013. சிரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர் François Murad மிகக் கொடூரமாய்க் கொல்லப்பட்டுள்ளது குறித்து சிரியாவின் கத்தோலிக்கத் திருஅவைக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும், புனிதபூமிக் காவலருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri.
கீழைரீதி பேராய அதிகாரிகள் மற்றும் உடன் உழைப்பாளர்களுடன் சேர்ந்து தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கர்தினால் Sandri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதுபோல், சிரியாவில் ஆயுதச் சப்தங்களை ஒழித்து எதிர்காலத்தில் அமைதியைக் கொண்டுவரும் நீதியுடன்கூடிய ஒப்புரவின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அனைத்துலகச் சமுதாயத்துக்கும், போரிடும் தரப்புகளுக்கும் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அருள்பணியாளர் Murad கொல்லப்பட்டுள்ளது எந்தவிதத்திலும் நியாயம் சொல்லப்பட முடியாதது என்றும், இவர் அடிக்கடி சொல்லியதுபோல, மீட்பின் நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்கள் அமைதியுடன் வாழ்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென்றும் கர்தினால் Sandri கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.