2013-06-25 16:00:50

இமாலயச் சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியத் திருஅவை உதவி


ஜூன்,25,2013. வட இந்தியாவின் உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியக் கத்தோலிக்கத் திருஅவையும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகிறது.
இமாலயாவின் சுனாமி எனச் சொல்லப்படும் இந்த இயற்கைப் பேரிடருக்கு இந்திய ஆயர் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அமைப்பு உதவி வருவது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய அவ்வமைப்பின் இயக்குனர் அருள்பணி ஃப்ரெட்ரிக் டி சூசா, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்திய காரித்தாஸ் அமைப்பு தனது பணியாளர்களை அனுப்பி அவ்விடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உடனடி உதவிகளைச் செய்து வருகின்றது என்று கூறினார்.
இந்தியாவில் பருவமழை முன்கூட்டியே வந்து இமாலயா மலைக்குக் அடிவாரத்திலுள்ள பல மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அருள்பணி டி சூசா தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதங்கள் குறித்த தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
இதற்கிடையே, உத்தர்கண்டில் மீட்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்புக்காகக் காத்திருக்கின்றனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.