2013-06-24 16:26:38

வாரம் ஓர் அலசல் – அலைகளை எதிர்த்து....


ஜூன்,24,2013 RealAudioMP3 . இந்நாள்களில் உலகின் பல பகுதிகளில் பெருமளவான மக்கள் வெள்ளமென அடித்துவரும் நீர் அலைகளை எதிர்த்து அவற்றில் நீந்திக் கரையேறி வருகின்றனர். கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணத்தில் கட்டிய வீடுகளையும், சொத்துக்களையும், உறவுகளையும், வீட்டு விலங்குகளையும் வெள்ளத்தில் இழந்து பலர் தவித்து வருகின்றனர். ஆஸ்ட்ரியாவில் கடந்த 150 ஆண்டுகளில் 7வது முறையாக இந்த ஆண்டு வசந்த காலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. மத்திய ஐரோப்பா முழுவதும் கடந்த மே 29ம் தேதி முதல் இம்மாதம் 6ம் தேதிவரை 250 மி.மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. தென் அமெரிக்காவில் சிலே, பொலிவியா, பெரு, அர்ஜென்டினா போன்ற நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டு லூர்து நகரின் புதுமைக் குகைக்கு முன்னர் ஓடும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இம்மாதம் 17ம் தேதி தொடங்கிய கன மழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கு அதிகம். 93 விழுக்காடு மலைகளும், 64 விழுக்காடு அடர்ந்த காடுகளும் நிறைந்த உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில் வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வாழ்ந்த பொதுமக்கள் கடந்த ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர். 3,200க்கும் அதிகமான படை வீரர்களும் 45 ஹெலிகாப்டர்களும், இன்னும் பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், பத்ரிநாத்தில் மட்டும் இன்னும் 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்படாமல் இருக்கின்றனர். இந்நிலையில், இத்திங்களன்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன.
ஆம் எம் அன்பு நெஞ்சங்களே, மனித வாழ்க்கை ஓர் எதிர்நீச்சல். அது கனமழையால் ஏற்பட்ட வெள்ளமாக அல்லது நிலச்சரிவுகளாக இருக்கட்டும், பொருளாதார மந்தநிலையாக இருக்கட்டும், குடும்பப் பிரச்சனைகள், எதிர்பாராத துன்பங்கள் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருக்கட்டும், நாம் ஒவ்வொருவரும் இந்தத் துன்ப அலைகளை எதிர்த்து, நீந்திக் கரை சேரத்தான் வேண்டும். இப்படி எதிர்நீச்சல்போடும் வாழ்க்கையில் நேர்மையுள்ள மனிதர்கள், தங்கள்முன்னர் நிற்கும் சவால்கள் என்னும் அலைகளுக்கு எதிராய் நீந்துவதற்குப் பின்வாங்குவதில்லை. உண்மைக்காக, நீதிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்ளும் இவர்கள் தங்களது மனச்சாட்சியின் குரலைப் புறக்கணிப்பதில்லை. இப்படி வாழ்ந்தவர்கள் பற்றியும், இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து வருபவர்கள் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். இந்நாளில் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிவரும் தென்னாப்ரிக்காவின் கறுப்பு காந்தி, 94 வயது நெல்சன் மண்டேலா, நிறவெறியை எதிர்த்த போராட்டத்தில் அத்தனைக் கஷ்டங்களையும் எதிர்கொள்ளப் பின்வாங்கியதில்லை என்பது உலகறிந்த உண்மை.
திருமதி ஆர்.மாலதி, கணவரை இழந்து, பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர். சென்னை மடிப்பாக்கத்தில் வாழ்ந்துவரும் இவர், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறைப் பணிஅனுபவம் உள்ளவர். இவர், தான் அநியாயமாக இழந்த வேலையை மீண்டும் பெறுவதற்கு நீதி கேட்டு நீதிமன்றம் ஏறி வெற்றியும் பெற்றுள்ளார். பணியில் விடுப்புக்கேட்டுத் தான் எழுதிய கடிதத்துக்கு நியாயம் கேட்ட திருமதி மாலதி, விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து இதோ....
''முப்பது வருஷமா காவல்துறைப்பணி அனுபவம் உள்ளவ நான், கணவர் இறந்தப்போ, அவரோட இழப்பு ஒரு பக்கம் என்னை வதைக்க, இன்னொரு பக்கம் நான் பார்த்துட்டு இருந்த வேலை பறிபோனக் கொடுமையை ஜீரணிக்கவே முடியல. அந்த நேரத்துல என் பசங்க சொன்ன ஆறுதலும் தைரியமும்தான் நீதிமன்றம்வரை கூட்டிட்டுப் போச்சு. அப்போதும் பலவழிகள்ல எனக்கு இடையூறு வந்துட்டுதான் இருந்துச்சு. எல்லாத்தையும் எதிர்த்து நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறிப் போராடினேன். அந்தத் தெய்வம் இருக்கு என்ற நம்பிக்கையை நீதிபதி சந்துரு சார் கொடுத்த தீர்ப்புலதான் உணர்ந்தேன். 'எந்தப் பிரச்சனைனாலும் மனசு உடைஞ்சு வீட்டுல உட்காரக் கூடாது, நீதி கேட்டு போராடினா நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்’னு பாடம் கற்றுக்கொடுத்த அந்தத் தீர்ப்பு, எனக்கு மட்டுமானத் தீர்ப்பு இல்லை... 'பெண்’ என்பதால பாதிக்கப்படுற ஒவ்வொரு பெண்ணுக்கும், போராடத் தெம்பு தரும் நம்பிக்கையோட புது அத்தியாயம்!''
என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். 1977-ம் ஆண்டு காவல்துறைப் பணியில் சேர்ந்த திருமதி ஆர்.மாலதி, தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் என்று பதவி உயர்வுகளும் பெற்றார். ஜூன் 2005ம் ஆண்டில் அவருக்கு நீண்ட மருத்துவ விடுப்பு தேவைப்பட்டது. துறையின் விதிகளின்படி, மருத்துவக்குழுவின் பரிசோதனை முடிக்கப்பட்டு, ஆறுமாத விடுப்பு வழங்கப்பட்டது. அது முடிந்ததும் அவரால் பணியில் சேர முடியவில்லை. ஏனெனில் இவரின் கணவர் கடுமையான இதயநோயால் தாக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கணவரும் இறந்துவிட்டார். கணவரை இழந்து விதவையானதால், அவர் சார்ந்த சமூகத்தில் விதவையான பெண் கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகள் சம்பிரதாயத்தால் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் வேலைக்குச் செல்ல இயலாத இக்கட்டான நெருக்கடியை விளக்கி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், இதனைத் தீரப் பரிசீலனை செய்யாமல், இயந்திரகதியில் செயல்பட்ட காவல்துறை தலைமையகம், ஏற்கனவே கொடுத்திருந்த பதவி நீக்கத் தண்டனையை 'கட்டாய ஓய்வு' என்று மட்டும் மாற்றி, மாலதி சம்பந்தப்பட்ட கோப்புகளை முடித்துக் கொண்டது. கணவரையும் இழந்து, வேலையையும் இழந்த மாலதி, மனம் தளராமல் உயர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார். அதற்கான பலனையும் பெற்றுள்ளார் என்று விகடன் இதழில் இருந்தது.
கணவரை இழந்த பின்பும், குடும்பத்தைக் காப்பாற்றத் துணிவுடன் துன்ப அலைகளை எதிர்த்துப் போராடிய மாலதி, பெண்களுக்கு, சிறப்பாக, விதவைப் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக இருக்கிறார். ஜூன் 23, இஞ்ஞாயிறு அனைத்துலக விதவைகள் தினம். பல நாடுகளில், வறுமை மற்றும் அநீதியை எதிர்நோக்கும் இலட்சக்கணக்கான விதவைப் பெண்களின் துயர் துடைப்பதற்காக இந்த அனைத்துலக விதவைகள் தினத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அங்கீகரித்தது. 2011ம் ஆண்டில் முதல் அனைத்துலக விதவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. லூம்பா(Loomba) நிறுவனம் இந்த அனைத்துலக நாளை உருவாக்கியது. இந்நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்ரீமதி புஷ்பவதி லூம்பா இதே ஜூன் 23ம் தேதி 1954ம் ஆண்டில் விதவையானார். வெளியுலகுக்குத் தெரியாமல் துன்புறும் விதவைகளின் நிலை குறித்து வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும். உலகில் 24 கோடியே 50 இலட்சம் விதவைகள் உள்ளனர், இவர்களில் 11 கோடியே 50 இலட்சம் பேர் வறுமையிலும், சமூகப் புறக்கணிப்பிலும், பொருளாதார வசதியின்றியும் வாழ்ந்து வருகின்றனர். 8 கோடியே 10 இலட்சம் விதவைகள் தங்கள் குடும்பங்களில் உடல்ரீதியான துன்பங்களை எதிர்கொள்கின்றனர். இலங்கையில் போரின்போது கணவர்களை இழந்த ஏறக்குறைய 90 ஆயிரம் பெண்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. வெள்ளப் பெருக்கு போன்ற தற்போதைய இயற்கைப் பேரிடர்கள், சண்டைகள் ஆகியவற்றால் தினமும் எத்தனையோ பெண்கள் கணவர்களை இழந்து வருகின்றனர். இத்துடன் இவர்களுக்கு வாழ்க்கை முடிந்து விடவில்லை. திருமதி மாலதி போன்று இப்பெண்கள் எதிர்நீச்சல் போட வேண்டும். நீதி கிடைக்கும்வரை அயராது போராட வேண்டும். இந்த அனைத்துலக நாளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பெண்கள் அமைப்புத் தலைவர் Lakshmi Puri, விதவைகள் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான துன்பங்களும் களையப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைத் திருமணத்தால் விதவைகள் ஆகியவர்கள் பெரிய அளவில் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லியுள்ள பூரி, தற்போது உலகில் இடம்பெறும் குழந்தைத் திருமணங்கள் போன்று தொடர்ந்து இடம்பெற்றால் 2011க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் 14 கோடிக்கு மேற்பட்ட சிறுமிகள் குழந்தை மணப்பெண்களாக இருப்பார்கள் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு வெளியிட்டுள்ள தகவலையும் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில்....
RealAudioMP3 “நீதியுள்ள பல மனிதர்கள் கெட்டுபோன விழுமியங்களை முன்வைக்கும் இவ்வுலகப்போக்கு எனும் அலைக்கு எதிராக நீந்துவதை விரும்பித் தேர்ந்து கொள்கின்றனர். அதனால் தங்களது மனசாட்சியின் குரலை அவர்கள் புறக்கணிப்பதில்லை. நேர்மையுள்ள மனிதர்கள் இத்தகைய அழுகிய விழுமியங்களைப் பரிந்துரைக்கும் இக்காலப் போக்குக்கு எதிராகச் செயல்பட பயப்பட மாட்டார்கள். ஆதலால் இளையோரும் இவ்வாறு செய்ய அஞ்ச வேண்டாம், ஏனெனில் அஞ்சுவது நமக்கு நல்லதல்ல. “இளையோர் துணிச்சலுள்ள மக்களாக இருந்து இந்த இவ்வுலகப் போக்குகளை வெற்றி கொள்ள வேண்டும், இப்படிச் செய்வதில் பெருமையடைய வேண்டும்”...
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். விதவைப் பெண்களும் தங்களது வாழ்க்கை எனும் கடலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதில் அடிக்கும் அலைகளில் நீந்துவதற்குப் பயப்படக்கூடாது. விதவைப் பெண்களே, வெறும் அறிவும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. நீங்கள் சார்ந்துள்ள சமூகம் முன்வைக்கும் சவால்களில் நீந்துவதற்குத் தேவையான துணிச்சல் தேவை. உங்கள் வயிற்றுப் பசிக்கு நீங்கள் மட்டுமே சாப்பிட முடியும் என்பதுபோல, உங்கள் வாழ்வுக்கான வெற்றிக்கு நீங்கள் மட்டுமே செயல்பட முடியும். உங்களுக்காக நீங்கள் மட்டுமே சிந்திக்க முடியும் என்பதை ஆழ்மனத்தில் பதியுங்கள்.







All the contents on this site are copyrighted ©.