2013-06-24 16:23:48

கற்றனைத்தூறும்..... உலகின் மிகப் பழமையான, மிக ஆழமான ஏரி


உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான பைக்கால் ஏரி, இரஷ்யாவின் சைபீரிய பனிப்பாலவனத்தில் பிறைவடிவத்தில் அமைந்துள்ளது. பைக்கால் ஏரி என்றால் "இயற்கை ஏரி" என்று அர்த்தம். இந்த ஏரி ஏறக்குறைய 640 கி.மீ. நீளத்தையும், 80 கி.மீ. அகலத்தையும் 1,637 மீட்டர் ஆழத்தையும், 31 ஆயிரத்து 722 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது. இந்த ஏரியில் ஏறக்குறைய 23 ஆயிரம் கன கிலோ மீட்டர் அளவு தண்ணீர் உள்ளது. இந்த அளவுத் தண்ணீர், வட அமெரிக்க ஐந்து ஏரிகளின் தண்ணீரின் அளவைவிட அதிகமாகும். 300க்கு அதிகமான சிறிய, பெரிய ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வருகின்றன, ஆனால் இங்கு பாயும் அங்காரா (Angara) ஆறு மட்டும் ஆர்டிக் பெருங்கடலில் சங்கமமாகின்றது. உலகில், மிகவும் தெளிந்த நல்ல தண்ணீரைக் கொண்டுள்ள பைக்கால் ஏரியில், சில இடங்களில் 40 மீட்டர் ஆழத்திலுள்ள பொருள்களைக்கூட எளிதாகப் பார்க்க முடியும். 2 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள் பழமையுடைய இந்த ஏரி, உலகின் மிகப் பழமையான ஏரி எனவும் கருதப்படுகிறது. இதில் 1,085 நீர்வாழ்த் தாவர வகைகளும், 1,550 நீர்வாழ் விலங்கினங்களும் உள்ளன. இவற்றில் மூன்றில் இரண்டு பகுதியை உலகில் எங்குமே காண முடியாது. இவ்வேரியில் ஏறக்குறைய 22 சிறிய தீவுகளும் உள்ளன. இத்தீவுகளுள் பெரியதாகிய ஒல்க்கோன் தீவு 72 கி.மீ நீளம் கொண்டது.
குளிர்காலத்தில் மைனஸ் 21 செல்சியுஸ் டிகிரியைக் கொண்ட இந்த ஏரி சுற்றிலும் பெரிய பனிமலைகளால் சூழப்பட்டுள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள நீரில் 20 விழுக்காடும், இரஷ்யாவின் நல்ல தண்ணீரில் 90 விழுக்காடு பைக்கால் ஏரியில் உள்ளது. பசிபிக் பெருங்கடலுக்கு மேற்கே ஏறக்குறைய 3,200 கி.மீட்டரிலும், மாஸ்கோவுக்கு கிழக்கே 5,100 கி.மீட்டரிலும், மங்கோலிய எல்லைப்புறத்துக்கு வடக்கே 200 கி.மீட்டரிலும் இது அமைந்துள்ளது. இதனை யுனெஸ்கோ நிறுவனம் 1996ம் ஆண்டில் உலகப் பாரம்பரியச் சிறப்புமிக்க இடமாக அறிவித்தது. Buryat பூர்வீக இனத்தவர் பைக்கால் ஏரியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப்பழைய ஏரியாக இருப்பதால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறியப் பெருந்துணையாய் உள்ளது. மற்ற ஏரிகளுக்கெல்லாம் சகோதரி ஏரி எனவும் பைக்கால் ஏரி அழைக்கப்படுகின்றது.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.