2013-06-24 16:55:29

அர்ஜென்டீனாவில் பூர்வீகக்குடிமக்களிடையே பணியாற்றுவோருடன் திருத்தந்தை சந்திப்பு


ஜூன்,24,2013. அமைதிக்கான நொபெல் விருதுபெற்ற Adolfo Pérez Esquivel அவர்களையும், அர்ஜென்டீனாவின் பூர்வீகக்குடிமக்களிடையே பணியாற்றும் Félix Díaz என்பவரையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் வாழும் பூர்வீகக்குடிமக்களின் உரிமைகள் குறித்து திருத்தந்தையுடன் மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
இலத்தீன் அமெரிக்க பூர்வீகக்குடிமக்களின் உரிமைகள், குறிப்பாக அவர்களின் நிலங்கள் மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய உரிமைகள் பாதுகாக்கப்பட உதவவேண்டியதன் அவசியம் குறித்து திருத்தந்தையிடம், Félix Díaz அவர்களும், Adolfo Pérez Esquivel அவர்களும் எடுத்துரைத்ததாக திருப்பீடம் அறிவித்தது.
அர்ஜென்டினாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள Formosa மாநிலத்தில் பூர்வீகக்குடிமக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார் Qom என்ற பூர்வீக இனத்தின் தலைவர் Félix Díaz.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.