2013-06-22 16:22:56

மத்திய கிழக்குப் பகுதிக் கிறிஸ்தவர்களுக்குப் பெருமளவில் ஆதரவு வழங்கப்படுமாறு இத்தாலியக் கர்தினால் அழைப்பு


ஜூன்,22,2013. மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்குப் பெருமளவில் ஆதரவு வழங்கப்படுமாறு இத்தாலியக் கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அழைப்பு விடுத்தார்.
முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்கும் அனைத்துலக ஒயாசிஸ் அமைப்பின் 10வது ஆண்டுக் கூட்டத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்தார் மிலான் பேராயர் கர்தினால் ஸ்கோலா.
வட இத்தாலியின் மிலான் பல்கலைக்கழகத்தில் இவ்வாரத்தில் நிறைவடைந்த இக்கூட்டத்தில் பேசிய கர்தினால் ஸ்கோலா, நாம் மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவிகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
பல கிறிஸ்தவர்கள் தங்கள் நாடுகளைவிட்டே வெளியேறுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றுரைத்த கர்தினால் ஸ்கோலா, இது மிகவும் மோசமான காரியம், ஏனெனில் கிறிஸ்தவம் பிறந்ததே மத்திய கிழக்கில்தான் என்று கூறினார்.
கர்தினால் ஸ்கோலா, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அனைத்துலக ஒயாசிஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.