2013-06-22 16:19:18

திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,22,2013. திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், கிறிஸ்துவின் மீதும், திருஅவை மீதும், மனித சமுதாயத்தின் மீதும் அன்பு கொண்டிருந்தார் என்று பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை ஆறாம் பவுல், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 50ம் ஆண்டின் நிறைவையொட்டி, அவர் பிறந்த இத்தாலியின் பிரேஷா மறைமாவட்டத்தின் 5,000 விசுவாசிகளை இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கஷ்டமான காலங்களில் இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைத்து வாழ்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் பிலிப்பீன்ஸ்க்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய உரையில், கிறிஸ்துவை அறிவிப்பதற்கான அவசியத்தை உணருகிறேன், என்னால் மௌனமாய் இருக்க முடியாது என்று உரைத்த சொற்களைக் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாமும் கிறிஸ்துவின்மீது இதேமாதிரியான அன்பைக் கொண்டிருக்கிறோமா? அவர் நம் வாழ்வின் மையமாக இருக்கின்றாரா? நமது அன்றாடச் செயல்களில் இதற்குச் சாட்சிகளாகத் திகழ்கின்றோமா? என்ற கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் திருஅவைமீது கொண்டிருந்த அன்பையும் விளக்கினார்.
மேலும், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் மனித சமுதாயத்தின்மீது கொண்டிருந்த அன்பு கிறிஸ்துவோடு தொடர்புடையது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன்மீது கொண்டிருக்கும் அன்பே மனிதர்களைச் சந்தித்து அவர்களை மதித்து அவர்களுக்குச் சேவை செய்யத் தூண்டுகின்றது என்றும் கூறினார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.