2013-06-21 16:28:30

நைஜீரிய வன்முறைக்கு வெளிநாடுகள் உரம் போடுகின்றன, அபுஜா கர்தினால்


ஜூன்,21,2013. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும், சிரியாவிலும் முஸ்லீம்கள் நடத்தும் வன்முறைகள், வெளிநாடுகளின் உதவிகளால் வீரியம் அடைகின்றன என்று நைஜீரியக் கர்தினால் John Onaiyekan குறை கூறினார்.
இத்தாலியின் மிலானில் நடைபெற்ற பல்சமயத் தலைவர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறிய அபுஜா பேராயர் கர்தினால் Onaiyekan, நைஜீரியாவிலுள்ள முஸ்லீம்களுக்கு வெளிநாட்டினர் உதவி செய்வது புதிதான செய்தி அல்ல என்றும் தெரிவித்தார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில ஆண்டுகள்வரை நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்தனர், ஆயினும், Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக்குழு 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிவிட்டன என்று கூறினார் கர்தினால் Onaiyekan.
நைஜீரியாவில் 2009ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 2,800 பேர் இறந்துள்ளனர். இதற்கு Boko Haram குழுவே காரணம் என்று Human Rights Watch என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
“மேற்கத்திய கல்வி பாவம்” என்று பொருள்படும் Boko Haram குழு, நைஜீரியா முழுவதும் Shariah என்ற இசுலாமியச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.