2013-06-21 16:08:02

திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத் தூதர்களிடம் : கிறிஸ்துவை உலகுக்கு எடுத்துச் செல்லும் மேய்ப்பர்களாக இருங்கள்


ஜூன்,21,2013. திருஅவையையும் நாட்டையும் அன்பு கூருங்கள், அன்புக்குச் சாட்சிகளாக இருங்கள், ஆன்மாவிலும் வாழ்விலும் நடுத்தர வர்க்கமாய் இருக்காதீர்கள் என்று ஏறக்குறைய 150 திருப்பீடத் தூதர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக இவ்வெள்ளிக்கிழமையும் இச்சனிக்கிழமையும் வத்திக்கானில் இரண்டு நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள திருப்பீடத் தூதர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தன்மறுப்பு, தியாகம் மற்றும் ஆண்டவரோடு தொடர்ந்த உறவு வைத்துக்கொள்வதன் வழியாகச் சுயத்திலிருந்தும், இவ்வுலகச் செல்வங்களிலிருந்தும் விலகி இருக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், மேய்ப்பர்களாக இருக்குமாறு கூறினார்.
திருப்பீடத் தூதர்களின் முக்கியமான பணிகள் குறித்துப் பேசும்போது ஆயர்களின் நியமனம் பற்றியும் உரைத்த திருத்தந்தை, மக்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களையும், தந்தையராக, சகோதரர்களாக, கனிவும் இரக்கமும், உள்ளத்தின் ஏழ்மையால் வழிநடத்தப்படுபவர்களாக, எளிமையான வாழ்வு வாழ்பவர்களாக, இளவரசர்கள் என்ற நினைப்பு இல்லாதவர்களாக இருப்பவர்கள் ஆயர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆயர் பதவியைத் தேடாதவர்களாக, அதேநேரம் திருஅவைக்குத் திருமணம் செய்யப்பட்டவர்களாக, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைக் கண்காணித்து அதனை ஒன்றிணைத்து வழிநடத்துவதில் எப்போதும் கவனம் உள்ளவர்களாக ஆயர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் இருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருப்பீடத் தூதர்கள் ஆபிரகாமைப் போல நாடுவிட்டு நாடு செல்பவர்கள், எனவே பொருள்கள், நண்பர்கள் மற்றும் பிற பிணைப்புக்களிலிருந்து விலகி இருக்கும் தியாக உள்ளம் இவர்களுக்குத் தேவை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருப்பீடத் தூதர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இரவு உணவு அருந்துவது இவ்வெள்ளிக்கிழமை நிகழ்வில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.