2013-06-21 16:38:18

ஜூன் 22, 2013. கற்றனைத்தூறும்...... தாய்ப்பாலின் அதிசயங்கள்


ஸ்வீடன் நாட்டின் லுண்ட் மற்றும் கோத்தென் பெர்க் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் வரும் வாய்ப்பை, தாய்ப்பால் குறைக்கிறது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள், வலிகளைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாகவும் இருக்கின்றனர். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை, எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. குறிப்பாக, கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் ஆகியவை உருவாகும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

ஆதாரம் சித்தார்கோட்டை







All the contents on this site are copyrighted ©.