2013-06-20 15:45:48

வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கத்தோலிக்கக் கோவில்


ஜூன்,20,2013. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் பொதுவான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலை ஜூன் 25, வருகிற செவ்வாயன்று Seoul முன்னாள் பேராயர் கர்தினால் Nicholas Cheong Jin-suk திறந்துவைப்பார் என்று கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன், "மன்னிப்பும் கழுவாய் தேடுதலும்" என்ற கருத்துக்களுக்காக அர்ப்பணிக்கப்படும் இக்கோவிலின் கலை வடிவங்களை இரு நாடுகளின் கலைஞர்களும் இணைந்து படைத்துள்ளனர்.
Seoul நகரின் வடக்கே Paju எனுமிடத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலை, ஜூன் 25ம் தேதி கர்தினால் Cheong Jin-suk அர்ச்சித்து, முதல் திருப்பலி ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவிலிருந்து தப்பித்து வந்த சிலர், வாங்கிய ஒரு நிலப்பகுதியை இக்கோவில் கட்டுமானத்திற்கென கொடையாக அளித்துள்ளனர் என்றும், 1997ம் ஆண்டு இக்கோவில் கட்டும் பணிகள் துவங்கின என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கொரிய கத்தோலிக்கத் திருஅவை வட, தென் கொரிய நாடுகளின் ஒருங்கிணைப்பையும், அமைதியையும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்றும், இவ்விரு நாடுகளின் மக்களுக்கு பாகுபாடுகள் இன்றி உழைத்துள்ளது என்றும் கர்தினால் Cheong Jin-suk ஆசிய செய்தியிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.