2013-06-20 15:44:02

எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் இவ்வுலகில் இருப்பது, அகில உலகச் சமுதாயத்திற்கு அவமானம் - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்


ஜூன்,20,2013. தொழில் நுட்பம் வெகு விரைவாக முன்னேறி வரும் இக்காலத்தில், எழுதவும் படிக்கவும் தெரியாத 25 கோடி குழந்தைகளும், 75 கோடி வயது வந்தவர்களும் இவ்வுலகில் இருப்பது அனைத்து நாடுகளின் அரசுகளுக்கும், தலைவர்களுக்கும், அகில உலகச் சமுதாயத்திற்கும் அவமான உணர்வைத் தருகின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னேற்றம் குறித்து, நியூயார்க் நகர், ஐ.நா. தலைமையகத்தில் இத்திங்கள் முதல் புதன் முடிய நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா.கூட்டங்களில் கலந்துகொள்ளும் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
"இளையோருக்கு, கல்வி, கலாச்சாரம், சமுதாயப் பாதுகாப்பு, மதிப்பு தரும் வேலைவாய்ப்பு" என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பேராயர் சுள்ளிக்காட், இளையோர் பெறவேண்டிய கல்வி குறித்து வலியுறுத்திப் பேசினார்.
மிகக் குறைந்த அளவாக, நாளொன்றுக்கு 2 டாலர்கள் வருமானம் பெறும் 32 விழுக்காட்டு ஊழியர்கள், இவர்களைக் காட்டிலும், மிகக் கொடுமையான வறுமையில் பணியாற்றும் 40 கோடி மக்கள், அனைவருக்கும் சமுதாயப் பாதுகாப்பு என்பது மிக அவசரமானத் தேவை என்பதை பேராயர் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆபத்தானச் சூழல்களில் பணியாற்றுவோரில் பெரும்பான்மையானவர்கள் இளையோரே என்பதை எடுத்துரைத்த பேராயர் சுள்ளிக்காட், பணியிடங்களில் நிகழும் விபத்துக்களில் இவர்களுக்கு எவ்வித ஈடும் கிடைக்காமல் போவதைக் குறித்தும் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.