2013-06-19 17:01:58

வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களில், விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம்


ஜூன்,19,2013. வேளாண்மையில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண விழையும் உலக அரசுகள், தங்கள் திட்டங்களில் விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 19, 20 அகிய நாட்களில் உரோம் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் 38வது அமர்வில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் Luigi Travaglino இவ்வாறு கூறினார்.
உலக உணவு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மரபணு மாற்ற ஆய்வுகள், பல்வேறு வகையான உணவுப் பொருட்களையும், உயிர்களையும் பெருமளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Travaglino, இந்தப் போக்கினைக் கண்காணிக்கும் வழிமுறைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல, காடுகள், கடல்கள் ஆகிய கருவூலங்களையும் காப்பாற்றினால் மட்டுமே, உலக உணவு உற்பத்தியில் நாம் நிறைவையும், சமமான பங்கீட்டையும் பெறமுடியும் என்று பேராயர் Travaglino தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.