2013-06-19 16:49:50

வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,19,2013. சட்டங்களையும், கட்டளைகளையும் கவனமாகப் படிப்பதில் கிறிஸ்தவ வாழ்வு அமைவதில்லை, மாறாக, மகிழ்வுள்ளவரான, தாராள மனம் கொண்டவரான கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இத்தகைய மனநிலை அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில் கூறினார்.
குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் பணியாளர்களுடன் புனித மார்த்தா இல்லத்தில் இப்புதன் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை, மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் வெளிவேடக்காரரைப் போல் இருப்பதன் ஆபத்தை தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
கிறிஸ்தவ தவத்தின் அடிப்படைகளான செபம், நோன்பு, தர்மம் ஆகிய மூன்று தூண்களை தகுந்த முறையில் புரிந்துகொள்ளாமல் வாழ்வது, மற்றவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளதென்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, ஆலயத்தில் வேண்டச் சென்ற பணிவான சமாரியரே நமது பக்தி முயற்சிகளுக்குத் தகுந்த எடுத்துக்காட்டு என்பதையும் வலியுறுத்தினார்.
ஆயர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Marc Ouellet அவர்களும், குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்களும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.