2013-06-19 17:01:18

விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி


ஜூன்,19,2013. பார்வைத்திறனற்றோர் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் இல்லாத நிலையை 'புத்தகப் பட்டினி' என்று நாம் அழைக்கக்கூடும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பார்வைத்திறன் அற்றோரின் பிரச்சனைகளைக் கலந்து பேசும் ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
உலகின் அனைத்து கலைப் படைப்புக்களையும் அனைவரும் சமமாக அனுபவிக்கவேண்டும் என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என்றாலும், விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.
உலக நலவாழ்வு நிறுவனமான, WHOவின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, உலகில் 28 கோடியே, 50 இலட்சம் பேர் பார்வைத் திறனற்றவர்கள் என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என்றும் பேராயர் தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
வளரும் நாடுகளில் பார்வைத்திறனற்று துன்புறும் மக்கள் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் அங்கு 1 விழுக்காடு மட்டுமே உள்ளனவென்றும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த நிலை 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
இன்றைய புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு, பார்வைத் திறனற்றோர் கணணி வழியாக நூல்களை வாசிக்கக் கேட்டு பயன்பெற முடியும் என்றாலும், இத்தகைய வசதிகள் பலரை அடைவதற்குத் தடையாக, சட்டப் பூர்வமான சிக்கல்கள் உருவாகியுள்ளன என்று பேராயர் தொமாசி சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.