2013-06-19 17:02:26

மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்


ஜூன்,19,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என்றும், இந்த உரையாடல் இன்றி, நாட்டில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் மதங்களுக்கிடையே நல்லுறவு இல்லாததால், தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், இந்த நிலையை மாற்ற உரையாடல் மிகவும் அவசியம் என்றும் Bangassou ஆயர் Juan José Aguirre Munos, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நாட்டில் பணியாற்றும் பல அரசு சாரா அமைப்புக்கள் கத்தோலிக்கத் திருஅவையிடம் இந்த விண்ணப்பத்தை எழுப்பியதால், தலத் திருஅவை இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று ஆயர் Munos விளக்கினார்.
LRA எனப்படும் வன்முறைப் படையினருக்கும், உகாண்டாவின் கொரில்லாப் படையினருக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைக் குறித்தும் ஆயர் Munos தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.