2013-06-19 16:59:33

புலம்பெயர்ந்து செல்லும் மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் Leonardo Sandri


ஜூன்,19,2013. மிக அவலமான நிலையில் வாழும் மக்களின் துன்பங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று அவர்கள் சார்பில் குரல் எழுப்பும் அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை திருஅவைகளின் 86வது ஆண்டுக் கூட்டத்தை இச்செவ்வாயன்று திருப்பலியுடன் துவக்கிவைத்த கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகளில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் அப்பகுதிகளில் நிலவும் அமைதியற்றச் சூழலால் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் பிரச்சனையை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Sandri அவர்கள், இம்மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளதென்று எடுத்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்கத்திய நாடுகள், இந்த பிரச்சனையுடன், கீழை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துவரும் மக்களை ஆதரிக்கும் சவாலையும் ஏற்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார் கர்தினால் Sandri.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.