2013-06-19 16:35:57

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன்,19,2013. இவ்வாண்டு குளிரும் அதிகமாக இருந்தது, குளிர்காலமும் நீண்டுகொண்டே இருந்தது. அதுபோல் கோடைகாலம் துவங்கியவுடனேயே வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டேச் செல்கின்றது. வெயில்தான் அதிகரிக்கிறது என்றால் புதன் மற்றும் ஞாயிறு தினங்களில் திருத்தந்தையைக் காணவரும் கூட்டமும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. மறைபோதக உரை வழங்கச் செலவிடும் நேரத்தைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடையே இறங்கிவந்து அவர்களுடன் உரையாடும் நேரம் அதிகமிருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். புதிதாகத் திருமணமான தமபதியர் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தையைக் காண வருவதும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. திருத்தந்தையும் இவர்களிடம் சென்று உரையாடி அவர்களை ஆசீர்வதிப்பதுடன், ஊக்கம் தரும் வார்த்தைகளையும் வழங்கி வருகிறார். நோயாளிகள் மற்றும் குழந்தைகளை ஒவ்வொருவராகச் சென்று ஆசீர்வதிக்கிறார். திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகங்களில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதை நேரடியாகக் காணமுடிகின்றது. வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, 'நம் விசுவாச அறிக்கை குறித்த மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று, திருஅவை கிறிஸ்துவின் மறையுடல் என்பது குறித்து நோக்குவோம் என, இவ்வார புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை கிறிஸ்துவின் மறையுடல். நாம் திருமுழுக்கில் பெற்ற தூய ஆவி எனும் கொடையின் வழியாக, இயேசுவை தலையாகக்கொண்ட ஒரே உடலின் அங்கத்தினர்களாக மறைபொருளாய் இறைவனோடு இணைந்திருக்கிறோம். கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பை, தினசரி செபம், இறைவார்த்தையைப் படித்தல், திருவருட்சாதனங்களில் பங்கேற்றல் பொன்றவைகள் மூலம் பலப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள, மறையுடல் என்ற உருவம் நமக்கு உதவி நிற்கின்றது. இயேசுவின் உடல் ஒன்றேயாயினும், பல்வேறுவிதமான அங்கத்தினர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என கொரிந்தியருக்கு எழுதிய மடலில் குறிப்பிடுகிறார் தூய பவுல். இயேசுவின் உடலை அன்பில் கட்டியெழுப்புவதற்கு, திருஅவை எனும் ஆன்மீகக்கூட்டுறவுக்குள், திருத்தந்தை, ஆயர்கள் ஆகியோருடன் ஆன ஒன்றிப்பில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்களிப்பும், பகிர்ந்துகொள்ளவேண்டிய கொடையும், ஆற்றவேண்டிய சேவையும் உள்ளது. நம் குடும்பங்களில், பங்குதளங்களில், தலத் திருஅவைகளில் மோதல்களை, பிரிவுகளை ஒதுக்கித் தள்ள உதவுமாறு, இறைவனை நோக்கி வேண்டுவோம். நம் இதயங்களில் தூய ஆவியார் பொழியும் அன்பெனும் கொடையால் தூண்டப்பட்டு, இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாக ஒருங்கிணைப்பில் வாழவும், ஒன்றிப்பை ஊக்குவிக்கவும், நம் இதயங்களை மற்றவர்களுக்கு திறக்கவும், தேவையான அருளை இறைவனை நோக்கி வேண்டுவோம் என்ற திருத்தந்தை, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் புலம்பெயர்வோர் உலக நாள் குறித்தும் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார். புலம்பெயரும் குடும்பங்கள் குறித்து இவ்வாண்டின் இத்தினத்தில் சிறப்புக்கவனம் செலுத்துமாறு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மத, இன மற்றும் அரசியல் காரணங்களால் இடம்பெறும் பாகுபாட்டு நிலைகள், சித்ரவதைகள் மற்றும் வன்முறைகளுக்கு அஞ்சி, தங்கள் வீடு, சொந்த நாடு என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள் குறித்து நாம் பாராமுகமாக இருக்கமுடியாது. அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களை வரவேற்கும் மன நிலையுடன் உதவ நாம் அழைப்பு பெற்றுள்ளோம். உதவி நாடும் இம்மக்களில் இயேசுவின் சாயலை நாம் காணவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. நம்பிக்கை ஆண்டில், கடந்த வாரம் ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட வாழ்வின் நாள் குறித்தும் நினைவுபடுத்திய திருத்தந்தை, நாம் அனைவரும் வாழ்வின் நற்செய்தியைப் பெற்று, அதற்குச் சாட்சியாக விளங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அதனை ஊக்குவித்து பாதுகாப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவிக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், கிறிஸ்துவை அறிவதிலிருந்து கிட்டும் மகிழ்ச்சியை அவர்களால் மறைத்து வைக்க முடியாது என தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.