2013-06-18 16:16:24

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் உவமை - பகுதி 1


RealAudioMP3 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையின் நாயகனை கடந்த வாரம் நாம் சிந்தித்தபோது, அவரது விடாமுயற்சி, 'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்ற பழமொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்பதைச் சிந்தித்தோம். நமது நாயகனை விட, இந்தப் பழமொழிக்கு இன்னும் உயர்ந்ததோர் எடுத்துக்காட்டு, லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில் நாம் சந்திக்கும் கைம்பெண் என்றும் சென்ற வாரம் குறிப்பிட்டோம்.
மனம் தளராது, இடைவிடாது, இறைவனிடம் வேண்டுங்கள் என்ற உண்மையை வலியுறுத்த, இயேசு, 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையையும், 'நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்’ என்ற இந்த உவமையையும் கூறியுள்ளார். லூக்கா நற்செய்தி 18ம் பிரிவின் துவக்கத்தில் இவ்வுவமையின் சூழலும், உவமையும் இவ்விதம் குறிப்பிடப்பட்டுள்ளன.
லூக்கா 18: 1-8
அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்ற பழமொழியை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால், இவ்வுவமையுடன் இந்தப் பழமொழியை இணைத்துச் சிந்தித்தபோது எனக்குள் உருவான எண்ணங்கள் எனக்கே சிறிது ஆச்சரியமாக இருந்தன.
எறும்பு உருவத்தில் மிகச் சிறியது. கல்லோ பெரியது. அதுபோல, யூத சமுதாயத்தில், கைம்பெண்கள் எறும்பைப் போன்று, மிகச் சிறியவர்களாகக் கருதப்பட்டவர்கள். யாரும் அவர்களை எளிதில் மிதித்து, நசுக்கிவிடலாம். நடுவர்களோ, கல்லைப் போன்றவர்கள், ஒரு சிலர் கல்மனமும் கொண்டவர்கள்.

பாறைகளை, கற்களைப் புரட்டும்போது, அவற்றிற்கடியில் எறும்புகள் இருப்பதைக் காணமுடியும். பாறையை, தங்கள் பாதுகாப்பாக எண்ணி அதற்கடியில் வாழும் எறும்புகள் அவை. மேலும், பாறைக்குக் கீழ் கிடைக்கும் நிழலையும், குளிரையும் நாடி எறும்புகள் அங்கு செல்லும். பாதுகாப்பும், குளிர் நிழலும் தரவேண்டிய பாறைகள், நினைத்தால், தங்களுக்கடியில் இருக்கும் எறும்புகளை முற்றிலும் நசுக்கி, நிர்மூலமாக்க முடியும். நீதியும், பாதுகாப்பும் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடுவர்களை நாடி வரும் கைம்பெண்கள் என்ற எறும்புகளை நேர்மையற்ற நடுவர்கள் பலர் நசுக்கியுள்ளனர். அன்றும், இன்றும் நிகழும் அவலம் இது.

நாம் சிந்திக்கும் இந்த உவமையில், இயேசு இந்த நடுவரை அறிமுகப்படுத்தும் வரிகளில், இவரைப் பற்றி ஒரு சில அம்சங்களைத் தெரிந்துகொள்கிறோம்:
லூக்கா 18: 2
ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
என்பது இயேசு தரும் அறிமுகம். நகரில் வாழும் நடுவர் இவர். கிராமங்களில் பணியாற்றும் நடுவர்களைவிட, நகரில் பணியாற்றும் நடுவர்கள் அதிக மதிப்பும், முக்கியத்துவமும் பெற்றவர்கள். பதவி, புகழ் இவற்றோடு இணைந்துவரும் பாவங்களும் இவர்களைப் பாதிக்க வாய்ப்புக்கள் அதிகம். இயேசு இந்த நடுவரை அறிமுகப்படுத்தும் அதே வரிகளை, நடுவரும் தன்னைப்பற்றி கூறுகிறார்.
லூக்கா 18: 4
நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
இறையச்சமோ, மக்கள் மீது மதிப்போ இல்லாமல் வாழ்வதை ஒரு பெருமையாகப் பறைசாற்றும் நடுவரை இந்த வரிகளில் நாம் காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நடுவர்கள் அல்லது, நீதிபதிகள் தோன்றிய வரலாற்றை ஆய்வு செய்தால், நீதிபதிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதன் இலக்கணத்தை அறிந்துகொள்ளலாம். இஸ்ரயேல் குலத்தவர் ஒரு நாடாக உருவானதும், அவர்கள் நடுவில் தலைவர்களாக பொறுப்பேற்றவர்கள், நீதிபதிகளே. அவர்களைப் பொருத்தவரை, மக்களுக்கு நீதி வழங்குவதே தலைவனின் தலையாயப் பணி. மக்களை ஆளும் தலைவர்களாக அரசர்கள் தோன்றியது, இஸ்ரயேல் வரலாற்றில் பல தலைமுறைகளுக்குப் பின்னரே நிகழ்ந்தது.

நீதி வழங்கும் தலைவர்கள் தோன்றிய நிகழ்வை, விடுதலைப் பயண நூல் 18ம் பிரிவில் நாம் காண்கிறோம். மக்கள் அனைவருக்கும் மோசே ஒருவரே நீதி வழங்கியதால், நாள் முழுவதும் அவரைச்சுற்றி மக்கள் கூடியிருந்தனர். மோசேயும் அவர்களுக்கு இறைவனின் சட்டங்களை விவரித்து, நீதி வழங்கிக் கொண்டிருந்தார். காலை முதல் மாலை வரை இது ஒன்றே மோசேயின் பணியாக இருந்தது. இதைக் கண்ட மோசேயின் மாமனார் அவருக்கு அறிவுரை ஒன்று வழங்குகிறார்:
விடுதலைப்பயண நூல் 18: 21-22
மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர். அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்.

திறமை, இறையச்சம், நாணயம் கொண்டிருப்பது; கையூட்டை வெறுப்பது ஆகிய பண்புகளே இஸ்ரயேல் மக்களின் நடுவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் என்பது துவக்கத்திலிருந்தே வரையறுக்கப்பட்டன. ஆயினும் இவை ஏதுமில்லாத ஒரு நடுவரை இயேசு இந்த உவமையில் சுட்டிக்காட்டுகிறார். நேர்மையற்ற இத்தகைய நடுவர்களைக் குறித்து விவிலியம் முழுவதும் பல்வேறு இடங்களில், சிறப்பாக, இறைவாக்கினர் எசாயா நூலில் வெப்பமான வார்த்தைகள் வெளிவந்துள்ளன:
இறைவாக்கினர் எசாயா 1: 23
ஆண்டவர் சொல்வதாவது : உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்; கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்; திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

இறைவாக்கினர் எசாயா 10: 2
அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு! அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்: எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்: கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகின்றார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு காலம் துவங்கி, நாம் வாழும் இன்றைய காலம் வரை நடுவர்கள் நீதியை நாடாமல், பணத்தை நாடுபவர்களாக மாறுவதால், அனைத்து நாடுகளிலும் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவருகிறோம்.
நீதியை விலைபேசும் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் பற்றியச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளன. பணத்திற்காக நீதியை எவ்வளவு தூரம் சிதைக்கமுடியும் என்பதில் இவர்கள் காட்டும் ஆர்வம், அதிர்ச்சியில் நம்மை உறையவைக்கின்றன.

இதோ ஓர் எடுத்துக்காட்டு:
இச்சம்பவம் 2008ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் Pennsylvania என்ற மாநிலத்தில் நடந்தது. "பணத்திற்காகச் சிறுவர்கள்" (Kids for Cash) என்ற பெயரில் இந்த அவலத்தின் விவரங்கள் வெளியாயின. Pennsylvania மாநிலத்தில் ஒரு சிறுவன் Walmart பேரங்காடியில் சில DVDகளைத் திருடினார். மற்றோரு சிறுவன் தன் பள்ளித் தலைமையாசிரியரை இணையதளத்தில் கேலிசெய்து எழுதினார். இன்னுமொருவர், யாரும் தங்கியிராத ஒரு கட்டிடத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தார். இவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன?
இச்சிறுவர்கள் அனைவரையும் வளர் இளம் பருவத்தினர் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்பதே தீர்ப்பு. Mark Ciavarella, Michael Conahan என்ற அனுபவம் மிகுந்த நீதிபதிகள் 2008, 2009ம் ஆண்டுகளில் இத்தீர்ப்புக்களை வழங்கினர்.

சிறுவர்கள் செய்த தவறுகள் சிறிதாகத் தோன்றுகையில், ஏன் இத்தனைக் கடுமையான தீர்ப்புக்கள், தண்டனைகள் என்பதை ஆய்வு செய்தபோது, ஓர் அதிர்ச்சியான உண்மை வெளியானது. இந்த மாநிலத்தில் நடத்தப்பட்ட வளர் இளம் பருவத்தினர் காப்பகம், தனியார் பொறுப்பில் இருந்தது. அந்தக் காப்பகத்தை இலாபகரமாக நடத்த, தேவையான அளவு கைதிகள் அங்கு இல்லை என்பதால், காப்பக உரிமையாளர் Robert Mericle என்பவருக்கும், இவ்விரு நீதிபதிகளுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தங்கள் நிறைவேறின. 26 இலட்சம் டாலர்கள் (2.6 மில்லியன் டாலர்கள்) பணம் கைமாறியது. எனவே, இவ்விரு நீதிபதிகளும் இந்தக் காப்பகத்தை நிறைப்பதற்காக இத்தகையக் கடுமையானத் தீர்ப்புக்களை வழங்கினர். தற்போது, இவ்விரு நீதிபதிகளும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

நீதிவேண்டி தன்னைத் தொடரும் கைம்பெண்ணுக்குப் பாதுகாப்பு தரும் பாறையாக இருக்கவேண்டிய நடுவர், அவரை நசுக்கும் பாறையாக மாறுவதை இயேசு தன் உவமையில் வெளிக்கொணர்கிறார். இந்தப் பாறையைச் சுற்றி வட்டமிடும் எறும்பாக மாறுகிறார், இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள கைம்பெண். தன் மனவலிமையையும், இறைவனையும் மட்டுமே நம்பி, கைம்பெண் மேற்கொள்ளும் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. எறும்பையொத்த கைம்பெண்ணின் முயற்சிகளை அடுத்தவாரம் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.