2013-06-17 15:03:52

வாரம் ஓர் அலசல் – உயிரின் விலை


ஜூன்,17,2013 RealAudioMP3 . "படைப்பில் சிறந்த மனிதரே, உங்களது வாழ்வு நிற்காத நீண்ட பயணம். அதில் மனிதர் அனைவரும் இணையும்வரை, மற்றவர் சுகத்தில், துயரத்தில் மனதார மூழ்குங்கள்" என்று ஒரு சமூக ஆர்வலர் சொல்கிறார். இக்கூற்றுக்கேற்ப பிறரது துயரத்தில், பிறரது சுகத்தில் மூழ்கியவர் Odoardo Focherini. இத்தாலியரான இவர் ஜூன் 15, இச்சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 1907ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி Carpi என்ற நகரத்தில் நல்ல கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், பிறரை உண்மையிலேயே எப்படி அன்புகூர வேண்டுமென்பதைக் கற்றவர், அதை அனுபவித்தவர். நல்ல கணவராகவும், ஏழு குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் வாழ்ந்த இவர், 1934ம் ஆண்டில் Verona கத்தோலிக்க ஆயுள்காப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1936ம் ஆண்டில் கத்தோலிக்க கழகத்தின் தலைவரானார். மறைமாவட்டத்தில் பல ஆன்மீக மற்றும் சமூகநலப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்தவர். 1939ம் ஆண்டில் L’ Avvenire என்ற இத்தாலிய கத்தோலிக்க நாளிதழின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போர் கடுமையாய் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நாத்சி கொள்கைகளின்கீழ் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டு வந்தனர். எனவே துன்புற்ற யூதர்களுக்குச் சார்பாகப் பணிகளைத் தொடங்கினார் முத்திப் பேறு பெற்ற Odoardo Focherini. இவரது இப்பணி 1942ம் ஆண்டில் ஆரம்பமானது. காயமடைந்த யூதர்கள் போலந்து நாட்டிலிருந்து இரயிலில் இத்தாலியின் ஜெனோவா வந்தனர். இவர்களின் நிலைகண்டு பரிதாபப்பட்ட ஜெனோவா கர்தினால் Raimondo Manzini, Odoardo Focheriniன் உதவியை நாடி இந்த யூதர்களுக்கு உதவுமாறு கேட்டார்.
1943ம் ஆண்டில் Odoardo Focherini அவர்களின் இந்தப் பிறரன்புப் பணி தீவிரமடைந்தது. இவர் தனது மனைவியின் ஆதரவுடன் 1943ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி யூதர்களுக்கு உதவிசெய்யும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். நம்பிக்கைக்குரிய ஆள்களைத் தொடர்புகொண்டு வெற்று அடையாள அட்டைகளைத் தயார் செய்து அவற்றில் தவறான விவரங்களை எழுதி நசுக்கப்பட்ட யூதர்களை இத்தாலி-சுவிட்சர்லாந்து எல்லைப் புறத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். இவரின் உதவியால் Giacomo என்ற யூதமதத்தவரது குடும்பம் முதலில் தப்பித்துச் சென்றது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பல யூதர்கள் இவரின் உதவியை நாடினர். இவ்வாறு 100க்கும் மேற்பட்ட யூதர்கள் தப்பித்துச் செல்வதற்கு இவர் உதவினார். எந்நேரமும் புன்சிரிப்போடும் அமைதியாகவும் இவ்வுதவியைச் செய்து கொண்டிருந்த Odoardo, 1944ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி Enrico Donati என்ற யூதரைத் தப்பச் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தபோது Carpi மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார். மார்ச் 13ம் தேதி Bolognaவிலுள்ள சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து Fossoli வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 4ம் தேதி Bolzanoவுக்கு அருகிலிருந்த கட்டாயத் தொழில் முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து செப்டம்பர் 7ம் தேதி ஜெர்மனிக்குக் கடத்தப்பட்டு முதலில் Flossenburg வதைப்போர் முகாமுக்கும், பின்னர் Hersbrueck வதைப்போர் முகாமுக்கும் அனுப்பப்பட்டார் Odoardo Focherini. இவரது இடது காலில் ஏற்பட்ட ஆறாதக் காயத்தால் 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி Hersbrueck வதைப்போர் முகாமில் தனது 37வது வயதில் இறந்தார். இந்த முகாம்களின் நிலைகளை விளக்கி, தனது பெற்றோருக்கும் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தனது பிள்ளைகளுக்கும் கடிதங்கள் அனுப்பினார். இக்கடிதங்கள் இரகசியமான வழிகளில் அனுப்பப்பட்டன. முத்திப்பேறு பெற்ற Odoardo Focheriniவுக்கு 1955, 1969, 2007 ஆகிய ஆண்டுகளில் யூதச் சமூகங்கள் விருதுகளை வழங்கியுள்ளன.
முத்திப்பேறு பெற்ற Odoardo Focherini, மனித வாழ்வைத் தனது உயிரினும் மேலாக மதித்தார். தனது உயிரைப் பணயம் வைத்து துன்புற்ற யூதர்களின் வாழ்வைக் காப்பாற்றினார். இந்த மாமனிதரை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் நன்றியோடு நினைத்த திருத்தந்தை பிரான்சிஸ், முத்திப்பேறு பெற்ற Odoardo Focherini, Hersbrueck நாத்சி வதைப்போர் முகாமில் 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தனது 37வது வயதில் இறந்தார். பல யூதர்களை நாத்சி அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்றிய இவர் வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சியாகத் திகழ்ந்தவர். இவருக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று கூறினார். இம்மூவேளை செப உரையில் வாழ்வின் நற்செய்தியைக் கொண்டாடுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ RealAudioMP3 ். திருஅவையில் இஞ்ஞாயிறன்று Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் சிறப்பிக்கப்பட்டது. இந்த வாழ்வு தினக் கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக, இஞ்ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்தினார். இதில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்வெண்ணிக்கையே மனித வாழ்வுக்கு உலகில் கிடைக்கும் ஆதரவைத் தெளிவாகக் காட்டுகின்றது. இத்திருப்பலியில் கலந்து கொண்ட இம்மக்களுக்கு ஆற்றிய மறையுரையில் கடவுள் வாழ்பவர், கருணையுள்ளவர் என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டுதானே என்று விசுவாசிகளிடம் கேட்டு அதை அனைவரும் சேர்ந்து சொல்லுமாறு கூறி அவர்களோடு சேர்ந்தும் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்.... RealAudioMP3
மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள் என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுள் வாழ்வை வழங்குபவர். ஆயினும், மனிதர் பல நேரங்களில் வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில்லை. வாழ்வின் நற்செய்தியை ஏற்பதில்லை. வாழ்வை மதிப்பதில்லை. ஏனெனில் தன்னலம், சுயஇலாபம், ஆதாயம், அதிகாரம், இன்பம் ஆகியவற்றால் மனிதர் ஆட்சி செலுத்தப்படுகின்றனர். அன்பாலோ, பிறர்நலனில் அக்கறை காட்டுவதாலோ மனிதர் செயல்படுவதில்லை. கடவுள் இல்லாத மனிதரின் நகரை, புதிய பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்கு மனிதர் கனவு காண்கின்றனர். வாழ்வின் நற்செய்தியைப் புறக்கணிப்பது சுதந்திர வாழ்வுக்கும், மனநிறைவுக்கும் இட்டுச்செல்லும் என நம்புகின்றனர். உயிருள்ள இறைவனின் இடத்தில் அழிந்துபோகும் மனித இன்பங்கள் வைக்கப்படுகின்றன. நம்மை ஒருபோதும் ஏமாற்றாத, அன்பும், வாழ்வும், சுதந்திரமுமான இறைவனுக்கு ஆகட்டும் எனச் சொல்வோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். RealAudioMP3
இன்று உலகில் தினமும் எத்தனைக் கருக்கலைப்புகள், கருணைக்கொலைகள், தற்கொலைகள், கவுரவக் கொலைகள், சகோதரத்துவக் கொலைகள். கடந்த வாரச் செய்திகள் மட்டுமே பல அதிர்ச்சித் தகவல்களை நமக்குத் தருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம், வண்டாவிளையைச் சேர்ந்த ஓர் ஏழை இளம் தம்பதியர் தங்களது 11 மாத ஆண் குழந்தையைக் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். குழந்தை பிறந்து 11 மாதமாகியும் அதன் கிச்சைக்காகப் பல இலட்ச ரூபாயைச் செலவு செய்தும் குழந்தை குணமாகவில்லை. இதுதான் அவர்களது இம்மனுவுக்குக் காரணம். கடந்த ஏப்ரல் 16ம் தேதி "டைம்ஸ் ஆப் இந்தியா" மதுரை பதிப்பில் ஒரு செய்தி வெளியானது. 55 வயதான ஒரு தந்தை, தனது 24 வயது மனநோயாளி மகனைக் கருணைக்கொலை செய்துவிட்டு அவரே காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இப்படித் தினமும் எத்தனையோ செய்திகள். கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி இன்று அரசிடம் விண்ணப்பிக்கும் மனிதரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த 21ம் நூற்றாண்டு தொடங்கிய பின்னர் கருணைக்கொலைகளைச் சட்டப்படி அங்கீகரித்த நாடுகளின் முதல்வரிசையில் ஹாலந்தும் பெல்ஜியமும் நின்றன.
இந்தியாவில் ஓராண்டில் 62 இலட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. 2008ம் ஆண்டில் உலக அளவில் 2 கோடியே 16 இலட்சம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடந்துள்ளன. இதனால் 13 விழுக்காட்டுத் தாய்மார் இறந்துள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் வரதட்சணை சார்ந்த 2,500க்கு மேற்பட்ட தீ எரிப்பு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகின்றன. சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய அரசு எதிர்ப்புக் கலவரங்களில் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 92,901. இவர்களில் 6,000 பேர் சிறார் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவை கூறியுள்ளது. துருக்கியிலும் அரசு எதிர்ப்பு வன்முறைப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஈராக்கில் சண்டை முடிந்து புதிய அரசும் அமைந்துவிட்டது. ஆனால் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சப்தங்களும் இன்றும் அந்நாட்டில் தொடர்ந்து கேட்கின்றன. ஈராக்கில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அன்பு நேயர்களே, மனித வாழ்வும், வாழ்வின் நற்செய்தியும் மதிக்கப்பட்டால் தினமும் இத்தனை உயிர்ச் சேதங்கள் இடம்பெறாது. ஒருசமயம் பணக்காரர் ஒருவர் தலையில் பணப்பையோடு பயணம் சென்றார். வழியில் ஒரு காட்டாற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அதனால் தலையில் பணப்பையைப் பத்திரமாக வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினார். திடீரென நடு ஆற்றில் வெள்ளம் அதிகமானது. தடுமாறினார். பணப்பை கைநழுவி ஆற்றில் விழுந்தது. யாராவது வந்து எனது பணப்பையைக் காப்பாற்றுங்களேன் என்று கத்தினார். அப்போது கரையில் இருந்த இளைஞர் ஒருவர் அக்குரலைக் கேட்டு ஆற்றில் குதித்து, மிதந்து சென்ற பணப்பையைக் கைப்பற்றிக் கரை வந்து சேர்ந்தார். பின்னர் அந்தப் பணக்காரரைத் தேடினார் இளைஞர். ஆனால் அவர் எப்போதோ ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் சொன்னார்....
எனது பணப்பையைக் காப்பாற்றுங்கள் என்று கத்தாமல், என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவர் கத்தியிருந்தால் நானும் அவரைக் காப்பாற்றியிருக்கலாமே என்று.
இன்று உலகில் பலரது மனநிலை இதுதான். உயிரைவிட, மனிதவாழ்வைவிட பணமும் பட்டமும் பதவியும் அதிகாரமும்தான் பெரிதாக இருக்கின்றன. தெய்வங்களாகப் போற்றப்படும் இவை உயிருக்கே, மனிதவாழ்வுக்கே உலை வைக்கின்றன. மனித உயிருக்கு விலை கிடையாது. மனித உயிரை விலைபேச முடியாது. ஏனெனில் அது புனிதமானது. மனித வாழ்வு இறைவனின் கொடை.








All the contents on this site are copyrighted ©.