2013-06-17 16:53:13

திருத்தந்தை : மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள்


ஜூன்,17,2013. மனிதர் பல நேரங்களில் வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில்லை, வாழ்வின் நற்செய்தியை ஏற்பதில்லை, வாழ்வை மதிப்பதில்லை, ஏனெனில் தன்னலம், சுயஇலாபம், ஆதாயம், அதிகாரம், இன்பம் ஆகியவற்றால் மனிதர் ஆட்சி செலுத்தப்படுகின்றனர் என இஞ்ஞாயிறு மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்தி, ஆற்றிய மறையுரையில், கடவுள் வாழ்பவர், கருணையுள்ளவர் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டுதானே என்று விசுவாசிகளிடம் கேட்டு அதை அனைவரும் சேர்ந்து சொல்லுமாறு கூறினார்.
மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை ஒருபோதும் ஏமாற்றாத, அன்பும், வாழ்வும், சுதந்திரமுமான இறைவனுக்கு ஆகட்டும் எனச் சொல்வோம் என்றும் கூறினார்.
கடவுள் இல்லாத மனிதரின் நகரைக் கட்டுவதற்கு கனவு காணும் மனிதர், வாழ்வின் நற்செய்தியைப் புறக்கணிப்பது சுதந்திர வாழ்வுக்கும், மனநிறைவுக்கும் இட்டுச்செல்லும் எனப் பொய்யாக நம்புவதால், உயிருள்ள இறைவனின் இடத்தில் அழிந்துபோகும் மனித இன்பங்கள் வைக்கப்படுகின்றன என்ற கவலையையும் தன் மறைபோதகத்தில் வெளியிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.