2013-06-17 16:48:41

திருத்தந்தை : கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்துச் செல்வது


ஜூன்,17,2013. உலகப் பொருட்களின் மீது பற்றற்றவராக, ஒன்றுமில்லாதவராக ஒரு கிறிஸ்தவர் வாழ்ந்தாலும், அவர் எல்லாமும் இருப்பவராக வாழ்கிறார், ஏனெனில் கிறிஸ்து அவருள் நிறைந்திருக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லக் கோவிலில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை, கண்ணுக்கு கண் என்ற நீதியைத்தான் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால், அதைவிட பெரிய சட்டத்தை இயேசு கொணர்ந்துள்ளார், அதுவே, ஒரு கன்னத்தில் அறைந்தவருக்கு மறுகன்னத்தையும் காட்டுவது, என்று கூறினார்.
வழக்கமாக நம்மை எவராவது அடித்தால், நாம் திருப்பி அடிப்போம், ஏனெனில், நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது எனக் கூறிய திருத்தந்தை, இறைவன் காட்டும் நீதியோ, இதிலிருந்து மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்று கூறினார்.
எவராவது உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவருக்கு மேலாடையையும் கொடுங்கள் எனவும், ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலை கூடச்செல்லுங்கள் எனவும் இயேசு கூறியதை நினைவுறுத்திய திருத்தந்தை, எல்லாமும் இயேசுவாக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது கடினமானதல்ல என எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்து செல்வது எனவும் கூறினார் திருத்தந்தை. ஆனால் இன்றைய உலகில் உலகப்பொருட்கள் எல்லாமுமாக நினைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்கு வெற்றிடமே வழங்கப்படுகிறது என்ற கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : SEDOC








All the contents on this site are copyrighted ©.