2013-06-15 16:24:51

திருத்தந்தை பிரான்சிஸ் : மனித மாண்பை மதித்து உயர்த்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு இன்றியமையாத கடமை உள்ளது


ஜூன்,15,2013. பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தின் 70 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், மனிதரின் நலனில் அக்கறை காட்டவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி சட்டங்களைச் சீர்திருத்தம் செய்வது, அதில் மாற்றங்களைக் கொண்டு வருவது என, சட்டங்கள் சார்ந்ததாக இருந்தாலும், மனித மாண்பை மதித்து உயர்த்துவதற்கு இவர்களுக்கு இன்றியமையாத கடமை உள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
இப்பிரதிநிதிகள் தங்களது குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், மனிதரை மதித்தல், பொது நலனில் அக்கறை காட்டுதல் போன்ற திருஅவை பரிந்துரைக்கும் விவகாரங்களை ப்ரெஞ்ச் சமுதாயம் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.