2013-06-15 16:22:04

திருத்தந்தை, EU அவைத் தலைவர் சந்திப்பு


ஜூன்,15,2013. EU என்ற ஐரோப்பிய சமுதாய அவைத் தலைவர் José Manuel Durão Barroso, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் EU அவைத் தலைவர் Barroso.
மனித உரிமைகளை, குறிப்பாக, சமய சுதந்திரத்தை ஊக்குவித்தல், இன்னும் சிறப்பாக, உலகில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் பகுதிகளில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்தல் குறித்து இச்சந்திப்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது.
ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் நடவடிக்கை உட்பட அனைத்துலக நிலைமைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மை, குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர், குடும்ப வாழ்வில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கங்கள் ஆகியவையும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அவ்வலுவலகம் தெரிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.