2013-06-15 15:56:48

ஜூன் 16, பொதுக்காலம் 11ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி, அடுத்த 25 வாரங்களுக்கு, நமது ஞாயிறு வழிபாடுகள் அமையும் என்று சென்ற வாரம் குறிப்பிட்டோம். கருணைக்கு ஓர் எடுத்துக்காட்டாக, நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கு மீண்டும் உயிரளித்ததால், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அந்தக் கைம்பெண்ணுக்கும் இயேசு மறுவாழ்வு தந்தார் என்பதைச் சென்ற வாரம் சிந்தித்தோம். சமுதாயத்தால் பழித்துரைக்கப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு இயேசு மறுவாழ்வு தரும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.
லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வில், பரிசேயர் ஒருவரது இல்லத்தில் இயேசு விருந்துண்ண சென்றார். ஊர் மக்களால் பழித்துரைக்கப்பட்ட ஒரு பெண், அழைப்பேதும் இன்றி உள்ளே நுழைந்து, இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவினார்.
இயேசுவை அழைத்த அந்தப் பரிசேயருக்கு "சீமோன்" என்று பெயர் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழையாமல் நுழைந்த பெண்ணுக்கோ பெயரேதும் இல்லை. அவர் ஒரு "பாவி" என்ற அடைமொழிமட்டும் அவர்மேல் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பாவி, அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, இன்று நமக்கும் ஒரு நற்செய்தியாக மாறுகிறார். மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும் நம் வாழ்வில் நிகழும் நன்மைகளைச் சிந்திக்க நம்மை அழைக்கிறார்.

அந்தப் பெண்ணைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பலருக்கும் அதிர்ச்சி, கோபம், எரிச்சல்... காரணம்... அவர் ஒரு விலைமகள். தன் உடலை விலைக்கு விற்பவர். அழையாமல் நுழைந்த அந்தப் 'பாவி', பரிசேயர் ஒருவரது பரிசுத்தமான வீட்டையும், அங்கு வந்திருந்த அனைவரையும் தீட்டுப்படுத்திவிட்டார்.
இத்தகைய கண்டனக் கனல் தெறிக்கும் அவர்கள் எண்ணங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், இயேசுவின் பாதங்களைத் தேடிவந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலத்தைப் பூசினார். இதைக் கண்ட பரிசேயர்கள், நீதி இருக்கைகளில்... இல்லை, இல்லை, அநீதி இருக்கைகளில் அமர்ந்து கண்டனத் தீர்ப்புக்களை எழுத ஆரம்பித்தனர். அந்தப் பெண்ணுக்கு அல்ல... அவருக்கு ஏற்கனவே அவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். இப்போது, அவர்கள் தீர்ப்பு, கண்டனம் அனைத்தும் இயேசுவை நோக்கி இருந்தன.
இயேசுவைப் பொருத்தவரை, அந்தப் பரிசேயர்களோ, அவர்கள் தன்மீது சுமத்திக் கொண்டிருந்த தவறான தீர்ப்புக்களோ... எதுவுமே முக்கியமல்ல. அவரைப் பொருத்தவரை, அவரது காலடியில் இருந்த அந்தப் பெண்தான் முக்கியம்.

"இவள் ஒரு பாவிப் பெண்" என்று ஊரெல்லாம் சொன்னபோது... இயேசு அவரை "பாவம், அந்தப் பெண்" என்று சொன்னார். "பாவம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வழியில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்! 'பாவம்' என்ற சொல்லில் கண்டனம் ஒலிக்கும், கனிவும் ஒலிக்கும். பயன்படுத்துபவரின் மனநிலையை, கண்ணோட்டத்தைப் பொருத்தது அது.
உலகம் இவரைப் "பாவி" என்று முத்திரை குத்தி, குத்தி... இந்தப் பெண் தலை நிமிர முடியாமல், தாழ்த்தப்பட்டிருந்தார். இன்று, முதன் முறையாக, மற்றொரு மனிதர் முன் தன்னையே மனதாரத் தாழ்த்திக்கொண்டார். தன்னையே மனமுவந்து தாழ்த்திக் கொண்ட அந்தப் பெண்ணை இயேசு தூக்கி நிறுத்தினார். அதுவும் தங்களையே உயர்ந்தோர் என்று எண்ணிக்கொண்டிருந்த அந்த பரிசேயர் கூட்டத்திற்கு முன் அந்தப் பெண்ணை உயர்த்தினார்.

இந்நிகழ்வின் வழியாக, இயேசுவும், அந்தப் பெண்ணும் மன்னிப்பு பற்றி சொல்லித்தரும் பாடங்கள் பல. மன்னிப்பின் முதல் படி... தன்னிலை உணர்தல், முக்கியமாக, தன் குறைகளை உணர்தல். நம்முடைய உண்மை நிலையையும், நமது குறைகளையும் உணரத் தயங்கும் நாம், இயேசுவை அழைத்திருந்த பரிசேயரைப் போல, வெகு எளிதாக பிறரிடம் குறைகள் காண்கிறோம்.
அடுத்தவரைத் தீர்ப்பிடும் அவசரம் நமக்குள் எவ்வளவு எளிதாக எழுகிறது என்பதைக் கூறும் ஒரு கவிதை இது. Valerie Cox என்பவர் எழுதிய இக்கவிதை விமான நிலையத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு. கடந்த சில ஆண்டுகள் வலைத்தளத்தில் வலம் வரும் இக்கவிதையின் தலைப்பு : 'பிஸ்கட் திருடர்'. (The Cookie Thief)

விமான நிலையம் ஒன்றில் தன் பயணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண், 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கினார். ஒரு நாற்காலியில் அமர்ந்து, தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். அருகிலிருந்த நாற்காலியில் மற்றோர் இளைஞர் ஏற்கனவே அமர்ந்து, செய்தித்தாள் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். இளம்பெண் அருகிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த இளைஞரும் அதே பாக்கெட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டார். தன்னிடம் உத்தரவு கேட்காமலேயே அந்த இளைஞர் அவ்விதம் எடுத்து சாப்பிட்டதால், இளம்பெண்ணுக்கு எரிச்சல் உண்டானது. இருந்தாலும், பொது இடமாயிற்றே என்று கோபத்தை அடக்கிக்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் பிஸ்கட் எடுக்கும்போதெல்லாம், இளைஞரும் எடுத்துக்கொண்டார். இறுதியில் ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. "சரி, நல்ல பழக்க வழக்கம் ஏதும் தெரியாத இந்த மனிதர் இப்போது என்ன செய்கிறார் பார்ப்போம்!" என்று அந்தப் பெண் காத்திருந்தார். அந்த இளைஞரோ, அந்த பிஸ்கட்டை எடுத்து, அதைப் பாதியாக உடைத்து, ஒரு பாதியை அப்பெண்ணிடம் புன்முறுவலுடன் நீட்டினார். பதிலுக்கு புன்முறுவல் ஏதும் இளம்பெண்ணிடமிருந்து வரவில்லை. "இப்படியும் நன்றிகெட்ட பிஸ்கட் திருடர்கள் இருக்கிறார்களே!' என்று எண்ணியபடியே, அவர் தன் விமானம் நோக்கி விரைந்தார்.
விமானத்தில் அவர் தன் இருக்கையில் அமர்ந்தபின்னும், அவரது கோபம் தணியவில்லை. சிறிதுநேரம் சென்று, விமானம் கிளம்பியதும், தன் பைக்குள் வைத்திருந்த புத்தகத்தை எடுக்க பையைத் திறந்தபோது, அவருக்கு அதிர்ச்சி... அந்தப் பைக்குள், அவர் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பிரிக்காமலேயே இருந்தது.
அப்படியானால்... அந்த இளைஞர் அருகில் அமர்ந்து அவர் சாப்பிட்டதெல்லாம் அந்த இளைஞர் வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டுகள்... இங்கிதம் தெரியாமல், நன்றியில்லாமல் நடந்துகொண்டது யார்? பிஸ்கட்டைத் திருடியது யார்? என்பதை இளம்பெண் அப்போதாகிலும் உணர்ந்திருக்கவேண்டும்.
அடுத்தவர்களை எளிதில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பரிசேயர்களைப் போல், அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதை விடுத்து, நம்முடைய உண்மை நிலையை உணர, அங்குள்ள குறைகளை உணர தூய ஆவியார் நமக்கு ஒளிதர வேண்டுவோம்.

தன்னிலை உணர்ந்து, தன் குறைகளை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. தன் குறைகளிலிருந்து விடுதலைபெற, மன்னிப்பு பெறவேண்டும். மன்னிப்பு என்றதும், இறைவனிடமிருந்தும், அடுத்தவரிடமிருந்தும் பெறும் மன்னிப்பையே நாம் பெரும்பாலும் எண்ணிப் பார்க்கிறோம். அவற்றைவிட கடினமான ஒரு மன்னிப்பையும் நாம் பெற பழகவேண்டும். அதாவது, நம்மை நாமே மன்னிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
நம்மில் பலர் நமது குற்றங்களை மன்னிக்கமுடியாமல் அவற்றின் வடுக்களை நீண்ட காலம் சுமந்து வருந்துகிறோம். Methodist சபையைச் சேர்ந்த David Seamands என்ற இறை பணியாளர், மனநலம் பெறுவதைப்பற்றி எழுதியுள்ள ஓர் அழகான நூல் - “Healing for Damaged Emotions” அதாவது, 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'. இந்நூலில், மரங்களையும், மனங்களையும் இணைத்து அவர் கூறும் ஓர் ஒப்புமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது: பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களை குறுக்காக வெட்டும்போது, அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பல வட்டங்கள் இருப்பதைக் காணலாம். அந்த வட்டங்கள் ஒவ்வொன்றும் அந்த மரத்தின் வரலாற்றைச் சொல்லும். அந்த மரம் வளர்ந்தபோது, ஓர் ஆண்டில் வறட்சி இருந்திருந்தால், அதைக் கூறும் ஒரு வளையம், வெள்ளம் வந்திருந்தால், அதைக் கூறும் வளையம், மரத்தை மின்னல் தாக்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் வளையம், மரம் வளர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பு சூழ்ந்திருந்தால், அதைக் காட்டும் ஒரு வளையம் என்று... அந்த மரம் வளர்ந்தபோது சந்தித்த பல அனுபவங்களை அந்த வளையங்கள், வரலாறாகச் சொல்லும். அதேபோலத்தான் மனித மனமும்... நாம் பெற்ற பல அனுபவங்கள் நமது உள்ளத்தில் பலவகை பதிப்புக்களை விட்டுச் செல்கின்றன. முக்கியமாக, நமது குழந்தைப்பருவ அனுபவங்களில் சில நாம் வாழ்நாள் முழுவதும் தாங்கிச் செல்லும் பதிப்புக்களை உருவாக்குகின்றன.
இப்பதிப்புக்கள், பாதிப்புக்களாக மாறாமல் காப்பது நமது கையில் உள்ளது. இந்தக் காயங்களை நமக்குள் உருவாக்கியவர்களை மன்னிப்பதற்கு நாம் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மன்னிப்பை தரவும் பெறவும் முடியாதவர்கள் வாழ்வு நரக வாழ்வாக மாறிவிடும். மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும் பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும் மன, நோய்கள் நீங்கும். அதன் தொடர்ச்சியாக, உடல் நோய்களும் நீங்கி, நலம் பெருகும்.

மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்... பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை வாழ்வோம்.
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:

இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.

இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால் குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும். அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை வழிநடத்தும்.

குழாய் நீரைப்போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும் அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம். அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால், பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும் நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து, வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது. நிறையாது.

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும் கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.








All the contents on this site are copyrighted ©.