2013-06-15 16:28:24

ஐக்கிய அரபுக் குடியரசுகளில் கர்தினால் Filoni


ஜூன்,15,2013. அரேபியத் தீபகற்பத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களது அன்றாடச் செபம், உடன் இருப்பவர்களோடு கருணையுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் புளிக்காரமாக வாழுமாறு கேட்டுக்கொண்டார் கர்தினால் Fernando Filoni.
ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கு ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni இவ்வெள்ளிக்கிழமையன்று துபாய் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள Ras Al Khaimah என்ற இடத்தில் தூய அந்தோணியார் புதிய ஆலயத்தைத் திருப்பொழிவு செய்த திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இக்குடியரசுகளில் வாழும் வெளிநாட்டுக் கிறிஸ்தவர்களில் தான் நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதாகத் தெரிவித்த கர்தினால் Filoni, ஒவ்வொருவரும் உயிருள்ள கற்களாக வாழ்ந்து உயிர்த்த கிறிஸ்துவில் தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பும்போது உலகை மாற்ற இயலும் என்றும் கூறினார்.
விசுவாசத்துக்குச் சாட்சியாக வாழ்வது மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவிக்கும், ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கும் மற்றும் கடவுளின் அன்பைப் பிரதிபலிக்கச் செய்யும் எனவும் கர்தினால் Filoni கூறினார்.
கடந்த செவ்வாயன்று அரேபியத் தீபகற்ப நாடுகளுக்குத் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய கர்தினால் Filoni இச்சனிக்கிழமையன்று அதனை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.