2013-06-14 16:30:49

திருத்தந்தை பிரான்சிஸ் ஆங்லிக்கன் பேராயரிடம் : மனித மற்றும் குடும்ப வாழ்வைப் பாதுகாப்பதற்குச் சேர்ந்து செயல்படுவோம்


ஜூன்,14,2013. மனித வாழ்வையும், திருமணத்தின்மீது அமைக்கப்பட்ட குடும்ப வாழ்வையும் பாதுகாப்பதற்கும், ஏழைகளின் அழுகுரலுக்குத் தீர்வு காணும் சமூகநீதிக்காக இன்னும் அதிகமாகச் உழைப்பதற்கும், சிரியா உட்பட நாடுகளில் சண்டைகள் முடிவடையவும் நாம் சேர்ந்து செயல்படுவோம் என்று இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையின் புதிய தலைவர் பேராயர் Justin Welby அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், அவரோடு சென்ற பிரதிநிதி குழுவினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
நாடுகளிடையே இடம்பெறும் சண்டைகளுக்குத் தீர்வு காணப்படவும், நாடுகளிடையே ஒப்புரவும் ஏற்படுவதற்கு பேராயர் Welby எடுத்துவரும் முயற்சிகளைத் தான் அறிந்தே இருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் சிறுபான்மையினர் உட்பட அந்நாட்டில் அனைவரின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கும் விதத்தில் அமைதியான தீர்வு காணப்படுமாறு இங்கிலாந்தின் கத்தோலிக்கப் பேராயர் நிக்கோல்ஸ் ஆங்லிக்கன் பேராயர் Welby ஆகிய இருவரும் சேர்ந்து விடுத்துள்ள அழைப்பையும் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகத்துக்கு அமைதியையும் அருளையும் ஒரு சொத்தாக வழங்க வேண்டும், கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்தில் வாழ்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இக்கொடைகள் கனிதர முடியும் என்றும் ஆங்லிக்கன் பேராயரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதிரியான வாழ்வு, பிற சமயத்தவருடனும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடனும் அமைதியாக வாழ உதவும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்புக்கான வழிகளைத் தேடுவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பம் என்றும் கூறினார்.
இங்கிலாந்து ஆங்லிக்கன் சபைத் தலைவர் பேராயர் Justin Welby அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் திருப்பீடத்தில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.