2013-06-14 16:34:38

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மனத்தாழ்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டும்


ஜூன்,14,2013. தான் பலவீனமானவர், தான் பாவி என்பதை ஒவ்வொருவரும் நேர்மையோடு ஏற்று, எந்த விதத்திலும் தனக்கே நியாயம் சொல்லிக்கொள்வதைத் தவிர்ப்பதே, கிறிஸ்துவில் கிடைக்கும் மீட்பின் கொடையை உண்மையிலேயே பெறுவதற்குரிய ஒரே வழியாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் வேலையாகிய விசுவாசத்தின் அசாதாரண வல்லமை, இவ்வுலகின் மண்பாண்டங்களாகிய பாவிகளாகிய மனிதர்மீது பொழியப்படுகின்றது என்பதை விளக்கும் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமடல் பகுதியை வைத்து தனது சிந்தனைகளை வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தான் பலவீனமான மண்பாண்டம் என்பதை உணர்ந்து, தன்னிடம் முழுவதும் இலவசமாக அளிக்கப்பட்ட பெரும் சொத்துக்குப் பாதுகாவலராக இருப்பது கிறிஸ்துவைப் பின்செல்பவர் என்பதற்கு அடையாளம் என்று கூறினார்.
இறையருளுக்கும் இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கும் இடையேயுள்ள உறவிலிருந்தே நமது மீட்பின் உரையாடல் ஊற்றெடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உரையாடலில் தனக்கே நியாயம் சொல்லிக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அருள்பணியாளரின் மனத்தாழ்மை, கிறிஸ்தவர்களின் மனத்தாழ்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டும், இதில் தவறினால் இயேசு நமக்குக் கொடுக்கும் மீட்பின் அழகைப் புரிந்து கொள்வதற்கானச் சக்தியை முதலில் இழப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வுலகின் மண்பாண்டங்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் மகிமையான மீட்பைப் புரிந்து கொள்வற்கு வரம் கேட்போம் எனத் தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.