2013-06-13 17:19:04

ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்குவதன் வழியாக, மதங்களுக்கிடையே நல்லுறைவை வளர்க்கமுடியும் - கர்தினால் Filoni


ஜூன்,13,2013. ஒரே கடவுள் என்ற அடிப்படை கொள்கை, இறை வேண்டலின் முக்கியத்துவம் ஆகிய அம்சங்களை நம்முடன் பகிரும் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில் தங்கி, பணிபுரியும் நீங்கள், ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்குவதன் வழியாக, மதங்களுக்கிடையே நல்லுறைவை வளர்க்கமுடியும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்கள் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவராகிய கர்தினால் Fernando Filoni அவர்கள், ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் மேற்கொண்டுள்ள ஐந்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக, இப்புதன் மாலை Abu Dhabiயில் அமைந்துள்ள புனித யோசேப்பு பேராலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இவ்வாறு மறையுரையாற்றினார்.
பணியின் நிமித்தம் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அருகாமையில் தான் இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உங்களிடம் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் என்று கர்தினால் Filoni அவர்கள் தன் மறையுரையின் துவக்கத்தில் பகர்ந்தார்.
சொந்த நாடுகளையும், உங்கள் குடும்பங்களையும் விட்டு, வெகு தூரத்தில் வாழும் நீங்கள், உங்கள் நம்பிக்கை வாழ்வை கட்டியெழுப்பியுள்ளது போற்றுதற்குரியது என்று கர்தினால் Filoni அவர்கள் அங்கிருந்தோரைப் பாராட்டினார்.
பல்வேறு நாடுகளின் குடிமக்களாகிய நாம் அனைவருமே, இவ்வுலகத்தில் பயணிகள், நமது நிலையான நாடும், வீடும் விண்ணகம் என்பதே, கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உண்மை என்று கர்தினால் Filoni அவர்கள் மறையுரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.