2013-06-12 16:12:37

வளர்ச்சியில் மிகவும் நலிந்த நாடுகளில் வாழும் மக்கள் உலக அரசுகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை - பேராயர் தொமாசி


ஜூன்,12,2013. உலக மக்கள்தொகையில், 12 விழுக்காடு மக்கள், அதாவது, 88 கோடிக்கும் அதிகமான மக்கள் வளர்ச்சியில் மிகவும் நலிந்த நாடுகளில் வாழ்கின்றனர் என்றும், இம்மக்கள் உலக அரசுகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் கூட்டம் ஒன்றில் இச்செவ்வாயன்று கலந்துகொண்டு உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.
வளர்ச்சியில் மிகவும் நலிந்ததென கருதப்படும் நாடுகளில் 2000மாம் ஆண்டிலிருந்து 7 விழுக்காடு வளர்ச்சி கூடியுள்ளது என்று அறிக்கைகள் கூறினாலும், மிக நலிந்த மக்களின் வாழ்வுத் தரம் வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை என்று பேராயர் தொமாசி கவலை தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட, 2011ம் ஆண்டு கணிப்பின்படி, HIV நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகில் 3 கோடியே 40 இலட்சம் என்றும், இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வளர்ச்சியில் மிகவும் நலிந்த நாடுகளில் வாழ்கின்றனர் என்பதையும் பேராயர் தொமாசி தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.