2013-06-12 16:10:44

மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் மனிதக் குடும்பத்தில் முழுமையாக இணைப்பது அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,12,2013. பார்வையற்றவருக்கு இயேசு பார்க்கும் திறனை வழங்கியது இந்த நம்பிக்கை ஆண்டில் அற்புதமான பொருள்தரும் அடையாளம்; நம் அனைவருக்கும் நம்பிக்கை ஒளியை வழங்கி, நம்மை வாழ்வின் பாதையில் நடத்தும் ஓர் அடையாளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பார்வையற்றோர், பார்வைத்திறன் குறைந்தோர் ஆகியோருக்குப் பணிபுரியும் ஓர் இத்தாலிய அமைப்பில் உள்ள 75க்கும் அதிகமான வயது முதிர்ந்த பார்வைத்திறன் அற்றவர்களுக்கு இச்செவ்வாயன்று ஒலிவடிவில் அனுப்பியச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
Tirrenia எனுமிடத்தில் அமைந்துள்ள Le Torri என்ற மையத்தில் தங்கியுள்ள பார்வைத திறனற்ற முதியவர்கள் உரோம் நகர் வந்து, திருத்தந்தையைச் சந்திக்க தாங்கள் விழைவதாக விருப்பம் தெரிவித்ததையடுத்து, திருத்தந்தை இந்தச் செய்தியை அனுப்பினார்.
அவர்கள் தன்னை வந்து பார்ப்பதற்குப் பதிலாக, தொடர்புத் துறை முன்னேற்றத்தின் வழியாக, தான் அவர்களை ஒலிவடிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
பார்வையற்றோருக்குப் பணிபுரியும் இத்தாலிய அமைப்பினருக்குத் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தத் திருத்தந்தை, மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் மனிதக் குடும்பத்தில் முழுமையாக இணைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.