2013-06-12 16:14:13

சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளையும் அரசு பாதுகாக்கவேண்டும் - மியான்மார் ஆயர்கள்


ஜூன்,12,2013. அனைவரின் மத உரிமைகளையும், குறிப்பாக, சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளையும் அரசு பாதுகாக்கவேண்டும் என்று மியான்மார் ஆயர்கள் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இஸ்லாமியருக்கு எதிராக அண்மையில் Meikhtila மற்றும் Lashio எனுமிடங்களில் நடைபெற்றுள்ள வன்முறைகளைக் கண்டனம் செய்துள்ள ஆயர்கள், அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கும் வழிகளை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
அடிப்படைவாதக் குழுக்களால் நிகழ்ந்து வரும் வன்முறைகளைத் தடுக்கவும், அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், அரசின் நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும் என்று விழைகிறோம் என்று மியான்மார் ஆயர்களில் ஒருவரான ஆயர் John Hsane Hgyi, UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
மத அடிப்படையில் எழும் மோதல்களையும், வன்முறைகளையும் அனைத்துத் தரப்பினரும் உடனடியாகக் கைவிடவேண்டும் என்று மியான்மார் ஆயர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மக்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.
Meikhtila மற்றும் Lashio எனுமிடங்களில், மே மாத இறுதியில் நிகழ்ந்த மோதல்களில் அடிப்படைவாத புத்தமதக் குழுக்கள், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மசூதி, பள்ளி, இன்னும் மற்ற கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளனர். இக்கலவரங்களால், 1000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.