2013-06-12 16:14:55

குடிபுகுவோர் குறித்த சட்டச் சீர்திருத்தங்கள் அவசியம் - பேராயர் José Gomez


ஜூன்,12,2013. குடிபுகுவோர் குறித்த சட்டங்களில் தகுந்த சீர்திருத்தங்களை அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை எனில், கிறிஸ்தவ சமுதாயம் மிகுந்த வேதனைகளுக்கு உள்ளாகும் என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
குடிபுகுவோர் குறித்த சட்டச் சீர்திருத்தங்களை மையப்படுத்திய விவாதங்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் இவ்வாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவாதங்களையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவை அமெரிக்க அரசுத் தலைவருக்கும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
இம்மடலில் ஆயர்கள் கூறியுள்ள கருத்துக்களை அமெரிக்க அரசு கவனத்தில் கொண்டு, இந்த விவாதங்கள் நல்ல பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்தவ சமுதாயம் காத்திருக்கிறது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் புலம் பெயர்ந்தோர் குழுவின் தலைவரும், Los Angeles பேராயருமான José Gomez கூறினார்.
இதுவரை அமெரிக்காவில் நிலவிவரும் குடிபுகுவோர் சட்டங்கள் கடுமையாக உள்ளன, இதனால், குடும்பங்கள் சிதைகின்றன, குடிபுகுவோரின் உழைப்பு அநீதமான முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்று பேராயர் Gomez கவலை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினர் நல்ல முடிவுகளை எடுப்பதால், அமேரிக்கா 21ம் நூற்றாண்டில், ஏனைய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கமுடியும் என்று பேராயர் Gomez தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.