2013-06-12 16:11:55

ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் கர்தினால் Fernando Filoni அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்


ஜூன்,12,2013. மக்கள் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவராகிய கர்தினால் Fernando Filoni அவர்கள், ஜூன் 11, இச்செவ்வாய் முதல் இச்சனிக்கிழமை முடிய UAE எனப்படும் ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார்.
அந்நாடுகளில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், ஏனைய மதத்தவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பையும் அக்கறையையும் கர்தினால் Filoni சுமந்து செல்கிறார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
துபாயில், Ras Al Khaimah என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள பதுவை நகர் புனித அந்தோனியாரின் கோவில் ஒன்றை, அப்புனிதரின் திருநாளான ஜூன் 13, இவ்வியாழனுக்கு அடுத்தநாள் வெள்ளியன்று கர்தினால் Filoni திறந்து வைக்கிறார்.
திறக்கப்படும் இக்கோவிலையும் சேர்த்து, ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் எட்டு கத்தோலிக்கக் கோவில்கள் உள்ளதென்று Fides செய்திக்குறிப்பு கூறுகிறது.
பிலிப்பின்ஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் இன்னும் 90க்கும் அதிகமான ஏனைய நாடுகளிலிருந்தும் அரேபிய நாடுகளில் வாழும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.