2013-06-12 16:13:07

ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 23ம் அமர்வில் பேராயர் தொமாசி அவர்களின் உரை


ஜூன்,12,2013. அடிப்படை மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பது குறித்து, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களின் நலன் முதன்மையான இடம் பெறவில்லை என்பதை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு நடத்தி வரும் 23ம் அமர்வில் உரையாற்றிய பேராயர் தொமாசி, ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மருந்துகள் குறித்த சட்டப்பூர்வமான பிரச்சனைகளே பெருமளவில் விவாதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
அடிப்படை மருந்துகளை மக்களுக்கு இலவசமாகவோ, அல்லது மிகக் குறைந்த விலையிலோ வழங்குவது ஒவ்வோர் அரசின் முக்கியமான கடமை என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இத்தகையப் பணிகளில் மதம் சார்ந்த பிறரன்பு அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் ஈடுபடுவதை அரசுகள் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பது என்ற அடிப்படை உரிமையை வெறும் சட்டம், பொருளாதாரம், அரசியல் ஆகியப் பின்னணிகளில் மட்டும் நோக்காமல், முழுமையான மனித நலனின் அடிப்படையில் காணும் வழிகளை ஐ.நா.வின் அறிக்கை உள்ளடக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் பேராயர் தொமாசி தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.