2013-06-11 16:42:32

விவிலியத்
தேடல் நள்ளிரவில் நண்பர் உவமை பகுதி 5


RealAudioMP3 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த William Holman Hunt என்ற ஆங்கிலேய ஓவியர், விவிலியத்தின் அடிப்படையில் பல ஓவியங்களைத் தீட்டியுள்ளார். தன் ஓவியங்கள், விவிலியக் காலத்தை தத்ரூபமாகக் காட்டவேண்டும் என்ற ஆவலில், இவர், 1850ம் ஆண்டு, தனது 23ம் வயதில், புனித பூமிக்குச் சென்று, அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் விவிலியக் காலத்தைக் கண்முன் கொண்டுவரும் வகையில் எதார்த்தமாக அமைந்துள்ளன.
1895ம் ஆண்டு இவர் தீட்டிய ஓர் அற்புதமான ஓவியத்தின் பெயர் - The Importunate Neighbour - ஆதாவது, ‘நேரம் காலம் தெரியாமல் வந்து தொல்லை கொடுக்கும் அடுத்தவீட்டுக்காரர்’. கடந்த சில வாரங்களாக நாம் சிந்தித்துவரும் 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையின் நாயகனுக்கு William Hunt வழங்கியுள்ள பட்டம் அது. நமது நாயகன் இந்த ஓவியத்தில் மிக எதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். 'Parable of the Friend at Midnight' என்ற தலைப்பில் நீங்கள் Wikipediaவில் தேடினால், இந்த ஓவியத்தைக் காணலாம்.

நிலவொளி வீசும் ஒரு குறுகியத் தெருவில், மூடப்பட்ட ஒரு கதவின் மீது சாய்ந்தபடி, அதைத் தட்டிக்கொண்டு நிற்கிறார் நமது உவமையின் நாயகன். அவர் அக்கதவை தட்டிக்கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதில், முட்டிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லும் வகையில் ஓவியர் நமது நாயகனைத் தீட்டியுள்ளார். ஊர் முழுவதும் உறங்கிவிட்ட நேரம், மூடப்பட்டக் கதவு, மனித நடமாட்டம் ஏதுமில்லாத ஒரு தெரு என்று பல அம்சங்கள் இந்த ஓவியத்தில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவை அனைத்துமே இயேசு இந்த உவமையின் வழியே சொல்லித்தர விழைந்த அந்த முக்கியக் கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன - அதாவது, நேரம், காலம் கருதாது, மனம் தளராது, இடைவிடாது செபியுங்கள் என்ற கருத்து.

"எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்து உனக்குத் தரமுடியாது" (லூக்கா 11: 7) என்று வீட்டு உரிமையாளர் சொல்லும் மறுப்புக்கள் எதுவும் நம் நாயகனைச் சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து முயற்சிகள் செய்கிறார். 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்ற பழமொழி இவரிடமிருந்துதான் உருவானதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் பழமொழிக்கு இன்னும் அதிகப் பொருத்தமான மற்றோர் எடுத்துக்காட்டை லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில் நாம் காண்கிறோம். எறும்புக்கு நிகராக, மிகச் சிறியவர் என்று யூத சமுதாயத்தில் கருதப்பட்ட கைம்பெண் ஒருவர், கல்லான மனம் கொண்ட ஒரு நடுவரை மனம் மாற்றிய உவமை அது. இறைவனிடம் வேண்டுதலில் தொடர் முயற்சிகள் வேண்டும் என்பதை வலியுறுத்த இயேசு கூறிய 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமை.

இவ்வுவமையின் தனிப்பட்ட அழகை அடுத்த வாரத் தேடலில் நாம் இன்னும் ஆழமாகச் சிந்திப்போம். தற்போதைக்கு, இவ்விரு உவமைகளிலும் கூறப்பட்டுள்ள 'இடைவிடாது வேண்டுதல்' என்ற கருத்தில் நம் கவனத்தைத் திருப்புவோம். தொடர்ந்து செபிப்பதைக் குறித்து, புனித பவுல் அடியார் கூறும் அறிவுரைகள் இதோ:

உரோமையர் 12: 12
எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்: இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.

தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5: 17
எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.

குறிப்பிட்டக் கருத்துக்களை, கவலைகளை மனதில் ஏந்தி நாம் செபிக்கிறோம். இக்கருத்துக்கள் மிக முக்கியமானவை என்றால், இடைவிடாது செபிக்கிறோம். நாம் கேட்கும் குறிப்பிட்ட கருத்து, ஒரு குறிப்பிட்ட வடிவில், குறிப்பிட்ட வழியில்தான் நம்மை வந்தடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் செபிக்கும்போது, நமது செபங்களில், கடவுள் முதலிடம் பெறுகிறாரா அல்லது நமது குறிப்பிட்ட தேவைகள், கவலைகள் முதலிடம் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Oswald Chambers என்ற மறைபோதகர் கூறியுள்ள ஒரு கருத்து இங்கு உதவியாக இருக்கும்: "We have to pray with our eyes on God, not on the difficulties" அதாவது, "கடவுள் மீது கண்களைப் பதித்து நாம் செபிக்கவேண்டும், நம் கவலைகள் மீதல்ல."
இடைவிடாத நவ நாட்கள், உண்ணா நோன்புகள் எல்லாம் மேற்கொண்டு, நாம் கேட்கும் மன்றாட்டு கிடைக்காதபோது, மனம் தளர்ந்து போகிறோம், செபிப்பதை விட்டுவிடுகிறோம். நம்மில் சிலர் கடவுள் நம்பிக்கையையே விட்டுவிடுகிறோம். தொடர்ந்து செபிப்பதால், நாம் எண்ணிய கருத்துக்கள் மட்டுமே நிறைவேற வேண்டும் என்பது உறுதியில்லை, நமது செபங்களின் விளைவுகள் பல்வேறு வழிகளில் நம்மை வந்தடையலாம். இதோ, இந்த எண்ணத்தை விளக்க, உவமை வடிவில் வரும் கதை:

உறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவர் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு தனிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ள வேண்டும்." கடவுள் இதைச் சொல்லிவிட்டு மறைந்தார்.அடுத்த நாள் காலை அந்த இளைஞன், தன் முழு வல்லமையோடு பாறையைத் தள்ளினார். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று ஓராண்டு இந்த முயற்சியைத் தொடர்ந்தார் அந்த இளைஞன். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.
"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞன் முறையிட்டார். "மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்... உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்." என்றார் கடவுள். இளைஞன் தன்னையே ஒரு முறை பார்த்தார். அவர் உடல் முழுவதும், ஒவ்வொரு அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.
"பாறையைத் தள்ளுவது தான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ மாற வேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்." என்றார் கடவுள்.
தள்ளுதல் என்று பொருள்படும் PUSH என்ற ஆங்கில வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள். இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்து என பார்க்கும் போது, PUSH என்ற வார்த்தையை Pray Until Something Happens என்று விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய்.
தொடர்ந்து வேண்டுதல் எழுப்புங்கள் என்று இயேசு கூறும்போது, நாம் இடைவிடாமல் வேண்டுவதால், நாம் எண்ணிய அந்தக் கருத்து நாம் எண்ணியபடியே, முற்றிலும் நிறைவேறும் என்று இயேசு உறுதி கூறவில்லை. பல நேரங்களில் நாம் கேட்டதைக் காட்டிலும் இன்னும் சிறப்பானத் தீர்வுகளை இறைவன் தரலாம். நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளுக்கு மாற்றான எதிர்பாராதத் தீர்வுகள் கிடைக்கலாம். ஆனால், நாம் வேண்டுவது நம் தந்தையிடம் என்ற நம்பிக்கை நமக்குள் இருந்தால், நமது செபங்களில், நம் தேவைகளை விட, தந்தையாம் இறைவன் முன்னிலை பெறுவார். இந்தத் தந்தைக்குத் தெரியும் நமக்கு என்ன நல்லது அல்லது கேட்டது என்று.
'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமைக்குப் பின் இயேசு கூறும் சிறந்த ஓர் அறிவுரை 'கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்' என்ற அறிவுரை. அந்த அறிவுரையின் ஒரு பகுதியாக, உலகத் தந்தையரையும், விண்ணகத் தந்தையையும் ஒப்புமைப்படுத்தி இயேசு கூறும் அற்புத வரிகளுடன் இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்:

லூக்கா 11: 11-13
அப்போது இயேசு, பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.