2013-06-11 16:52:53

திருத்தூதர்கள் யாரும் வங்கிக் கணக்கோ, அதிகாரமோ பெறாமல் நற்செய்தியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,11,2013. நற்செய்தியைப் பரப்பும் பணியில் ஈடுபடும் திருஅவைக்குத் தேவையான இரு அடையாளங்கள், ஏழ்மையும், இறைவனைப் புகழ்வதும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர் பர்னபா அவர்களின் திருநாள் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றியத் திருத்தந்தை, இத்திருநாளுக்கு வழங்கப்பட்ட மத்தேயு நற்செய்திப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு மறையுரை வழங்கினார்.
இறையரசை அறிவிக்க பன்னிரு திருத்தூதர்களை இயேசு அனுப்பியபோது, அவர்கள் பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று கூறியதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, எளியதோர் வாழ்க்கையே இறைவனின் நற்செய்தியை அறிவிக்கும் சிறந்த வழி என்று கூறினார்.
"கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறியதே, இறையரசுப் பணிகள் அனைத்திற்கும் அடிப்படையான ஓர் அம்சம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
திருத்தூதர்கள் யாரும் வங்கிக் கணக்கோ, அதிகாரமோ பெற்றிருக்கவில்லை; அத்தகைய சுதந்திரமான வாழ்வே அவர்களை நற்செய்தியைப் பரப்பும் பணியில் ஈடுபட வைத்தது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு, புனித பிலிப்பு ஆகியோரை எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
இச்செவ்வாயன்று நிகழ்ந்த திருப்பலியில், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்கள் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் இணைந்தார். இப்பேராயத்தின் ஊழியர்கள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.