2013-06-11 17:09:13

அரசியலமைப்பு சட்டத் திருத்த முயற்சிகள் குறித்து இலங்கை ஆயர்கள் கவலை


ஜூன்,11,2013. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொணரும் இலங்கை அரசின் முயற்சி குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது இலங்கை ஆயர் பேரவை.
இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதுபோல் இந்த 13வது சட்டத் திருத்தம் கொணரப்பட்டால் அது, அந்நாடு இதுவரை கண்டுவந்த சமாதான முயற்சிகளை பின்னடைய வைக்கும் எனவும் கூறுகிறது ஆயர் பேரவையின் அறிக்கை.
இலங்கை ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித் மற்றும் பொதுச்செயலர் ஆயர் வலென்ஸ் மென்டிஸ் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக்கொள்ள முயல்வது என்பது, நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை குறைப்பதுடன், நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் வழிவகுக்கும் என கவலையை வெளியிட்டுள்ளது.
எல்லா இனத்தவர்க்கும் மதத்தவர்க்கும் எவ்வித பாகுபாடுமின்றி நீதி, அமைதி மற்றும் உண்மை வளத்தை உறுதிசெய்யும் ஒரு அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குவது குறித்துச் சிந்திக்காமல், மாநில அவைகளிலிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவர முயல்வது, மக்கள் நலனுக்கு ஊறுவிளைவிப்பதாகவே இருக்கும் எனவும் இலங்கை ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Colombo diocese








All the contents on this site are copyrighted ©.