2013-06-10 17:32:06

வாரம் ஓர் அலசல் – பற்றியெரியும் ஆசை


ஜூன்,10,2013. ஏழு வயதேயான சிறுமி Tess அன்று காலை மிகுந்த கவலையோடு காணப்பட்டார். அந்த நேரத்தில் அவளது அப்பா சொன்ன தகவல் அவளை மிகுந்த கவலைப்பட வைத்தது. அவள் வேகமாகத் தனது அறைக்குள் சென்றாள். பின்னர் அவள் வீட்டுக்கு அருகிலிருந்த Rexall மருந்துக்கடைக்கு ஒருவித ஆவேசத்துடன் விரைந்தாள். அங்கு கடைக்காரரின் கவனத்தைத் திருப்புவதற்காகப் பொறுமையோடு நின்று கொண்டிருந்தாள். சிறிதுநேரம் காத்திருந்த Tess, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு தொண்டையைச் செருமி கடைக்காரரின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தாள். ஆனாலும் கடைக்காரர் அவள் பக்கம் திரும்பவில்லை. அதனால் அவளது பையிலிருந்து காசை எடுத்து அங்கிருந்த கண்ணாடிப் பெட்டியில் அடித்தாள். இப்போது அந்தக் கடைக்காரர் கோபத்துடன் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார் கடைக்காரர். நான் சிகாகோவில் இருக்கும் எனது சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன என்று சொன்னார். அதற்கு Tess, நானும் எனது சகோதரர் பற்றி உம்மிடம் பேச வேண்டும் என்று அதே வேகத்துடன் சொன்னாள். உடனே அந்த மருந்துக் கடைக்காரர், மன்னிக்கனும், இப்போது சொல் என்று கேட்டார். Tess அவரிடம், எனது சகோதரர் பெயர் ஆன்ட்ரூ. அவனது தலைக்குள் ஏதோ வளர்கிறது. ஏதாவது புதுமை நடந்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என எனது அப்பா சொன்னார். ஒரு புதுமை எவ்வளவு விலை என்று கேட்டாள். அதற்கு அவர், சிறுமியே, இங்கே நாங்கள் புதுமைகளை விற்பதில்லை. உனது சகோதரர் நிலை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் என்னால் உதவி செய்ய முடியாதே என்று மிகவும் அன்போடு ஆறுதலாகச் சொன்னார். ஆனால் Tess அவரை விடுவதாக இல்லை. சார், இங்கே பாருங்க, அந்தப் புதுமையை வாங்குவதற்கு என்னிடம் காசு இருக்கின்றது. அது போதவில்லை என்றால் மீதியை உடனடியாக நான் கொண்டு வருகிறேன், ஆனால் அந்தப் புதுமை எவ்வளவு விலை என்றுமட்டும் சொல்லுங்கள் என்று பிடிவாதமாகக் கேட்டாள்.

இவர்கள் இருவரின் சுவாரஸ்யமான உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த மருந்துக் கடைக்காரரின் சகோதரர் குறுக்கிட்டார். Tess, என்ன விதமான புதுமை உனது சகோதரருக்குத் தேவை என்று சொல் என்று கனிவோடு கேட்டார். உடனே Tess, சார், உண்மையாகவே எனக்கு தெரியாது என்று அழுது கொண்டே சொன்னாள். அவன் கடுமையாக நோயுற்று இருக்கிறான். அவனுக்கு அறுவை சிகிச்சை தேவை என அம்மா சொன்னார்கள். அதற்குச் செலவு செய்ய எனது அப்பாவிடம் பணம் இல்லை. எனவே அந்தப் புதுமைக்குத் தேவையான பணத்துக்கு எனது கைச்செலவுப் பணத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றாள். சரி, உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று அவர் கேட்க, ஒரு டாலரும் 11 சென்டுகளும் இருக்கின்றன. இப்பொழுது என்னிடம் இருப்பது இவ்வளவுதான். தேவைப்படின் இன்னும் கொஞ்சம் பணத்தைக் கொண்டு வருகிறேன் என்றாள். அப்போது அந்த மனிதர், புன்சிரிப்போடு, என்ன ஒற்றுமை, உனது சகோதரருக்குப் புதுமை நடப்பதற்கு அதே அளவு பணம்தான் தேவை என்றார். பின்னர் அந்த மனிதர் அந்த ஒரு டாலரையும் 11 சென்டுகளையும் தனது ஒரு கையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையால் அச்சிறுமியை அணைத்துப் பிடித்து, உனது வீட்டுக்கு என்னை கூட்டிப்போ, உனது சகோதரரையும், உனது பெற்றோரையும் நான் பார்க்க வேண்டும், நீ விரும்பும் புதுமையை என்னால் செய்ய முடிகின்றதா எனப் பார்க்கிறேன் என்று சொன்னார். அவர்கள் இருவரும் Tessன் வீட்டுக்குச் சென்றனர். பின்னர் ஒருநாளில் அருகிலிருந்த மருத்துவமனையில் ஆன்ட்ரூவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ஆன்டரூ குணமடைந்தான்.

இது கதை அல்ல. உண்மையாகவே நடந்த நிகழ்வு என்று The Power of being Different. என்ற நூலில் John Paul Carinci என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதியுள்ளார். அந்த மருந்துக் கடைக்காரரின் சகோதரர் வேறு யாருமல்ல, அவர்தான் புகழ்பெற்ற சிகாகோ மருத்துவர் Carlton Armstrong Andrew. நரம்பியல் நிபுணரான இவர், ஆன்ட்ரூவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து, Tess மற்றும் அவளது குடும்பத்தின் கடுந்துயரை நீக்கியிருக்கிறார். ஏதாவது ஒரு காரியம் தேவை என்றால் 7 வயதுச் சிறுமி Tess போன்ற சிலர் எப்படியாவது அதைச் சாதித்துக் காட்டி விடுகிறார்கள். சிறுமி Tess மருந்துக்கடையில் விரும்பிக் கேட்டது போல் இது உண்மையிலேயே புதுமைதான். இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. சிறுமி Tess தனக்குத் தேவையான காரியத்தில் பற்றியெரியும் ஒருவித வேகத்துடன் இறங்கினாள். அவளின் சகோதரர் ஆன்ட்ரூவைக் காப்பாற்றுவதற்கு எந்த விலை கொடுத்தாகிலும் அந்தப் புதுமையை வாங்கிவிட வேண்டுமென்று விரும்பினாள். அந்தப் புதுமையை வாங்க முடியாது என்று அந்தப் பிஞ்சு மனத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆயினும் விடாப்படியாக, மனஉறுதியோடு செயல்பட்டாள். மருத்துவர் Carlton வழியாக அந்தப் புதுமை நடந்தது. சிறுமி Tessன் சகோதரர் ஆன்ட்ரூவும் குணமடைந்தான். ஏழு வயதுச் சிறுமிக்கு இது எப்படி சாத்தியமானது?

அல்போன்சோ எலஞ்சிக்கல் என்ற அருள்பணியாளர் சொல்கிறார் : “நாமும் நமது வாழ்க்கையில் எதையாவது சாதிக்க விரும்பினால் அந்த ஆசை நம் உள்ளத்தில் தீயாகப் பற்றியெரிய வேண்டும்” என்று. நீ உண்மையிலே ஒன்றைப் பெறுவதற்கு விரும்பினால் உன்னில் அந்த ஆசை தீவிரமாக இருக்க வேண்டும், அப்பொழுது நீ பெறுவாய் என்று ஜிம் ஆபட் என்ற புகழ்பெற்ற தளக்கட்டுப் பந்தாட்ட வீரர் சொல்லியிருக்கிறார். இவர் பிறக்கும்போதே ஒரு கையுடன், அதாவது இடது கையுடன் மட்டும் பிறந்தவராம். ஆனால் விளையாட்டுத் தளத்தில் ஒரு கையால் அவர் பந்து வீசுவதைப் பார்க்கும் எவரும் வியக்காமல் இருக்க மாட்டார்கள் என்று எலஞ்சிக்கல் சொல்கிறார். நாம் ஒரு காரியத்தை விரும்பினால் மட்டும் போதாது, அதைப் பெற வேண்டுமென்ற பற்றியெரியும் ஆசை இருக்க வேண்டும். அப்பொழுது நம் வாழ்விலும் புதுமைகள் நடக்கும்.

கடந்த ஆண்டு நவம்பரில் சுலோவேனியா நாட்டில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்துலக ஜூனியர் செஸ் போட்டியில் சிறுமிகள் பிரிவில் தங்கம் வென்றவர் மகாலட்சுமி. உலகச் சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மகாலட்சுமி பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார். ''மகாலட்சுமி செஸ் ஆடும் விதத்தைக் கண்டு வியந்தேன். செஸ் விளையாட்டில் எனது வாரிசு என்று இவரைச் சொல்லலாம்'' என்று பாராட்டியிருக்கிறார். சென்னை, வேலம்மாள் பள்ளியில் 10ம் வகுப்பில் சேரப்போகும் மகாலட்சுமி, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா முகுந்த் குமார் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர். ஆறு வயதில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று, அனைவரின் கவனத்தையும் தன் வசம் இழுத்தார். 2005ம் ஆண்டில் ஒளரங்காபாத்தில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றார். 2006ம் ஆண்டில் ஜார்ஜியாவில் நடந்த உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். மகாலட்சுமியால் இப்படி எப்படி உலக சாதனைகளைச் சாதித்துக் காட்ட முடிகின்றது.

மனிதர், நாள் முழுவதும் எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அப்படியேதான் ஆவார் என்று ஏறத்தாழ எல்லா உளவியல் ஆசிரியர்களும் சொல்கின்றனர். இதையேதான் வான்பிரான் என்ற ஜெர்மன் நாட்டு ராக்கெட் அறிவியலாளர், மனிதர் எங்கே போக விரும்புகின்றாரோ அங்கேதான் அவரது இருப்பிடம் என்று சொன்னார். ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா சென்று அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்த இவர், நிலவுக்கு முதல் மனிதரை அனுப்பக் காரணமாக இருந்தவர். நிலவுக்கு ஆசைப்படுகிறவர்கள் போய் வரலாம் என்று சொன்னவர் வான்பிரான். எதையும் முடியும் என்று சொல்பவர்களில் இந்த அறிவியலாளரும் ஒருவர். ஆனால் நமது புலனறிவை வைத்துக்கொண்டு முடியாது என்று முதலிலே நாம் முடிவு கட்டிவிட்டால், சாதனைக்கான கதவை முகப்பிலே நாம் அடைத்து விடுகிறோம் என்றுதான் அர்த்தம். அதற்குப் பதிலாக “முடியும்”, “செய்து பார்க்கலாம்”, “தொடர்ந்து முடியும்” என்ற நல்ல நேர்மறை எண்ணங்களை நம்மில் வளர்க்க வேண்டும். அப்போது நமது இலட்சியங்கள் சாதனைகளாய்ச் சிறகடிக்கும்.

அண்மையில் ஒரு செய்தி தமிழ் நாளிதழில் வந்தது. குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். இவர் ஓர் ஆட்டோ டிரைவர். டாடா நானோ தொழிற்சாலை, சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. தற்போது ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது. இதில் 3 ஏக்கர் நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை. தற்போது, அந்த 3 ஏக்கர் நிலத்திற்கான நஷ்ட ஈடான 1.9 கோடி ரூபாய் ராஜூவின் பெயருக்கு காசோலையாக வந்துள்ளது. தனக்கு வந்த காசோலையை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ. அவர் கூறுகையில், நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று கூறியுள்ளார்.
அன்பு நெஞ்சங்களே, நல்ல எண்ணங்களை நம்மில் பற்றியெரியச் செய்வோம். ஒரு சாதனையைச் செய்ய வேண்டுமென்றால், ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்றால் நம்மில் உண்மையான ஆவல், தீவிரமான ஆவல் இருக்க வேண்டும். மேலோட்டமாக இருந்தால் அதனால் பலன் இல்லை. நமது ஆசைகளில் நியாயம் இருக்கும்போது, நமது ஆசைகள் பிறர் உரிமைகளைப் பாதிக்காதபோது, ஆசையினால் நமக்கு உண்மையான ஈடுபாடு தொடங்கும்போது, ஆசைகள் நமது மனத்தில் திடமான வலுப்பெறும்போது அவை இலட்சியமாகின்றன என்கிறார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.







All the contents on this site are copyrighted ©.