2013-06-10 16:42:11

திருத்தந்தை: இறைவனுக்கு இதயங்களைத் திறந்து அடிமையாவதே உண்மையான விடுதலை


ஜூன்,10,2013. இறைவனுக்கு நம் இதயங்களைத் திறந்து அவருக்கு அடிமையாவதிலேயே உண்மையான விடுதலை நமக்குக் கிட்டுகிறது என இத்திங்கள் காலை வத்திக்கானின் புனித மார்த்தா இல்லத் திருப்பலியின்போது மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நம் இதயங்களைத் திறந்து தூய ஆவியாரின் செயற்பாடுகளை அனுமதிப்பதன் மூலமே இறைவனின் புதிய கட்டளையை நாம் புரிந்துகொள்ள முடியும் என்ற திருத்தந்தை, நம் மனங்களை மாற்றுவதற்கு நாம் தூய ஆவியாரை அனுமதிக்கவில்லை எனில் அது வெளிவேடமாகும் எனவும் எடுத்துரைத்தார்.
இரு தலைவர்களுக்கு நாம் சேவையாற்றமுடியது, ஒன்றில் இறைவனுக்கு அல்லது இவ்வுலகின் சுகங்களுக்கு சேவையாற்றவேண்டியிருக்கும், மாறாகஅங்கொரு கால் இங்கொரு கால் எனநிற்கமுடியாது எனவும் கூறினார் திருத்தந்தை.
பேறுபெற்றோர் குறித்து மலைப்பொழிவில் இயேசு கூறியதையும் எடுத்துரைத்ததிருத்தந்தை, இது மனிதஅறிவால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாதது, ஏனெனில் ஏழையாய் இருத்தல், எளிமையாயிருத்தல், நீதிமேல் வேட்கை கொண்டிருத்தல், இரக்கம் கொண்டிருத்தல் போன்றவை இவ்வுலகில் வெற்றியைக் கொண்டு வருவதில்லை என காண்கிறோம், ஆனால் இவற்றால்தான் நமக்கு மீட்பு கொணரப்பட்டது என்பதை புரிந்துகொள்ளதூயஆவியாரின் உதவி தேவைப்படுகிறது என்றார்.
நமக்கு மீட்பு தேவையென்பதை அறிந்துள்ளபோதிலும், நாம் அதற்காக நம் இதயங்களை தூய ஆவியாருக்குத் திறக்க அஞ்சுகிறோம், ஏனெனில் இறைவனின் கட்டுப்பாட்டை அல்ல, மாறாக நம்மையே நாம் ஆள விரும்புகிறோம் என்பதே இந்த மீட்புக்குத் தடையாக உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை.
இறைவனுக்கு அடிமையாக இருப்பது ஒரு புதுவிதமான சுதந்திரம், இது உலகைச் சார்ந்த சுதந்திரம் அல்ல என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : SeDoc








All the contents on this site are copyrighted ©.