2013-06-10 16:53:18

ஜெர்மன் நாட்டு திரு நற்கருணை மாநாட்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியச் செய்தி


ஜூன்,10,2013. "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?" என்ற சொற்கள், புனித பேதுருவின் வாயிலிருந்து உறுதியாக வெளிவந்ததைப் போல் இன்று நம் மத்தியில் இச்சொற்கள் வெளிவரவில்லை எனினும், இச்சொற்கள் இன்றும் நமக்கு பொருளுள்ளதாக விளங்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 5ம் தேதி முதல் இஞ்ஞாயிறு 9ம் தேதி முடிய ஜெர்மனியின் Cologne நகரில் நடைபெற்ற ஜெர்மன் நாட்டு திருநற்கருணை மாநாட்டிற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Cologne பேராயர் கர்தினால் Joachim Meisner அவர்களுக்கும், ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Robert Zollisch அவர்களுக்கும் அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
13ம் நூற்றாண்டில் உலகில் முதல் முறையாக கிறிஸ்துவின் திருஉடல் திருநாளைக் கொண்டாடியது Cologne நகரமே என்பதையும், அந்நகரில் 1909ம் ஆண்டு நிகழ்ந்த அனைத்துலக திருநற்கருணை மாநாட்டையும் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை மீது அந்நகரம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியைப் பாராட்டினார்.
திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரோடும் தான் மனத்தால் ஒன்றித்திருப்பதாகவும், அவ்வொருமைப்பாட்டை உணர்த்தவே, தன் சார்பில் கர்தினால் Josef Cordes அவர்களை, திருநற்கருணை மாநாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
ஜூன் 5, கடந்த புதன் முதல், இஞ்ஞாயிறு முடிய நடைபெற்ற இந்த நற்கருணை மாநாட்டில் 45,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்று திருப்பீடச் செய்தியொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.