2013-06-10 16:47:31

இறைவனின் அன்புக்குத் தலைசிறந்த அடையாளமாக விளங்குவது இயேசுவின் திரு இருதயம் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,10,2013. மக்கள் மத்தியில் பரவியுள்ள பக்தி முயற்சிகள், அடையாளங்களுக்கு அதிக மதிப்பு வழங்குகின்றன என்றும், இறைவனின் அன்புக்குத் தலைசிறந்த அடையாளமாக விளங்குவது இயேசுவின் திரு இருதயம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த 80,000க்கும் அதிகமான மக்களுக்கு, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடைபெறும் ஜூன் மாதம் முழுவதும் கடைபிடிக்கப்படும் திரு இருதய பக்தி குறித்து விளக்கினார்.
இயேசுவின் திரு இருதயம், வெறும் கற்பனை அடையாளம் அல்ல என்றும், இயேசுவின் அன்பும் கருணையும் வெறும் உணர்வுப்பூர்வமான எண்ணங்கள் அல்லவென்றும் விளக்கிக் கூறியத் திருத்தந்தை, இத்திரு இருதயம் உயிரளிக்கும் சக்தி என்று எடுத்துரைத்தார்.
நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்த இயேசுவின் அன்பு இதயம் நமது உயிரையும் மீண்டும் உயிர்ப்பிக்க வல்லது என்றும், இவ்வுலகின் வறுமை, நோய் மற்றும் பிற துன்பங்களால் கட்டுண்டிருக்கும் மக்களை உயிர்ப்பிக்கும் வண்ணம், இயேசுவின் அன்பை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்தியாவின் மும்பை மாநகரிலிருந்து வந்திருந்த பயணிகளையும், இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தோரையும் வாழ்த்தியத் திருத்தந்தை, அன்னை மரியாவின் மாசற்ற இதயத்தின் பாதுகாவலில் இவ்வுலகம் அனைத்தையும் ஒப்படைப்பதாகக் கூறி, அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.