2013-06-08 16:18:52

திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்தார் இத்தாலிய அரசுத்தலைவர்


ஜூன்,08,2013. இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே பல காலமாக நிலவும் நல்லுறவு அடையாளத்தின் ஒரு பகுதியாக இத்தாலிய அரசுத்தலைவர் தன்னை சந்திக்க வந்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை காலை தன்னைச் சந்திக்க வத்திக்கான் வந்திருந்த இத்தாலிய அசரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்பொலித்தானோவை சந்தித்த நிகழ்ச்சியில் உரை வழங்கியத் திருத்தந்தை, இத்தாலிக்கும் திருஅவைக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மக்கள் மற்றும் சமூக நலனை மையம் கொண்டதாக உள்ளது என்பது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
மதச் சுதந்திரத்தின் முதல் ஒப்பந்தமாக நோக்கப்படும் 17 நூற்றாண்டுகளுக்கு முந்தைய மிலான் ஒப்பந்தம் குறித்தும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து இத்தாலிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், அந்நாட்டின் முன்னேற்றத்திலும் கத்தோலிக்கர் வழங்கியுள்ள பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
இன்றையை உலகில் மதச் சுதந்திரம் பல நாடுகளில் மீறப்படுவது, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள், குடும்ப மதிப்பீடுகள் பலவீனமடைந்துள்ளது, மக்கள்தொகை குறைவு, இளையத் தலைமுறை மீதான போதிய அக்கறையின்மை போன்றவை குறித்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை.
ஏறத்தாழ 1850ம் ஆண்டைச்சேர்ந்த தாமிரப்பட்டயம் ஒன்றை இச்சந்திப்பின்போது, திருத்தந்தைக்கு, நினைவுப்பரிசாக வழங்கினார் இத்தாலிய அரசுத்தலைவர் நாப்பொலித்தானோ.
அத்தாமிரப்பட்டயத்தில் 'நிர்வாகத்தலைமை இல்லத்திற்கு திருத்தந்தை ஒன்பதாம் பயஸின் வருகை' என அக்காலத்திற்குரிய வித்தியாசமான வண்ணத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.