2013-06-07 16:36:37

குழந்தைத் தொழிலுக்கு எதிரான சுவரொட்டிகள் - இந்திய ஆயர் பேரவை வெளியீடு


ஜூன்,07,2013. குழந்தைத் தொழிலுக்கு எதிராகப் போராடும் நோக்கத்தோடு, இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு இவ்வியாழனன்று விளம்பரச் சுவரொட்டிகளை வெளியிட்டது.
ஜூன் 12, வருகிற புதனன்று குழந்தைத் தொழிலுக்கு எதிர்ப்பு கூறும் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் செயலர் பேராயர் Albert D'Souza டில்லியில் அமைந்துள்ள ஆயர் பேரவை அலுவலகத்தில் நிகழ்ந்த ஒரு விழாவில், இச்சுவரொட்டிகளை வெளியிட்டார்.
தொழில் குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் முயற்சியில் இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு ஈடுபட்டுள்ளது என்று இப்பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Jaison Vadassery, UCAN செய்தியிடம் கூறினார்.
இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தேவையான ஒரு முக்கிய கருவூலம் குழந்தைகள் என்ற கருத்து இக்கூட்டத்தில் பலராலும் வலியுறுத்தப்பட்டது என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
உலகெங்கிலும் இன்று 21 கோடியே, 50 இலட்சம் குழந்தைகள் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும், இவர்களில் 11 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மிகவும் ஆபத்தானச் சூழல்களில் தொழில் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் UCAN செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.