2013-06-07 16:33:57

உயர்ந்த, விரிந்த மனதுடன் வாழ உதவுவதே கல்வி - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,07,2013. நம் ஒவ்வொருவரையும் உயர்ந்த, விரிந்த மனதுடன் வாழ உதவுவதே கல்வி, இந்த எண்ணத்தை நமக்குச் சொல்லித் தருபவர் லொயோலாவின் புனித இஞ்ஞாசியார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியிலும், ஆல்பேனியாவிலும் இயேசு சபையினர் நடத்தும் பள்ளிகளிலிருந்து வத்திக்கான் வந்திருந்த 8000க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் முன்னாள் மாணவர்களை இவ்வெள்ளி மதியம் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி நமக்குள் உருவாக்க வேண்டிய நன்னெறி விழுமியங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
தன் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வை கூடியிருந்த அனைவர் மத்தியிலும் தான் உணர முடிகிறது என்றும், இந்தக் கூட்டம் இயேசுவின் தூய இருதயத் திருநாளன்று நடைபெறுவதை ஒரு நல்ல அடையாளம் என்றும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையைத் துவக்கினார்.
புனித இஞ்ஞாசியார் தான் துவங்கிய துறவு சபைக்கு இயேசுவின் பெயரை ஏன் தேர்ந்தார் என்ற கேள்வியை எழுப்பி, இயேசுவை ஒப்பற்ற ஓர் ஆசிரியராக இஞ்ஞாசியார் உணர்ந்ததால், அவரது பெயரை தான் நிறுவிய சபைக்குச் சூட்டினார் என்று பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்வியின் வழியாக நாம் ஒவ்வொருவரும் மேன்மை பெற அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, உள்மனச் சுதந்திரத்தின் வழியே நாம் இந்த மேன்மையைக் காணமுடியும் என்றும் எடுத்துரைத்தார்.
சுதந்திரம் என்பது நாம் நினைத்த வண்ணம் நடப்பது அல்ல, மாறாக, இவ்வுலகம் முழுவதும் ஒரு வழியே செல்லும்போது, நமது மனசாட்சி சொல்லும் உயர்ந்த வழிகளைப் பின்பற்ற நாம் பெறும் துணிவு இந்த சுதந்திரத்திலிருந்து பிறப்பது என்று விளக்கிக் கூறினார்.
அரங்கத்தில் கூடியிருந்த ஆசிரியர்களுக்கு தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான கல்வி ஒவ்வொருவரையும் அதிகாரச் சக்தியில் வளர்ப்பதில் அல்ல, மாறாக, அனைத்து மக்களோடும், இவ்வுலகம் முழுமையோடும் இணைந்து வாழும் வழிகளைச் சொல்லித் தருவதில் அடங்கியுள்ளது என்று கூறினார்.
இத்தாலியிலிருந்தும், அல்பேனியாவிலிருந்தும் வந்திருந்த முன்னாள் மாணவர்களையும் சிறப்பாக வாழ்த்தியத் திருத்தந்தை, "இறைவனின் அதிமிக புகழுக்காக" அனைவரும் உழைக்க, இயேசுவின் அருளும், அன்னை மரியாவின் பரிந்துரையும் அவர்களுடன் தொடரட்டும் என்ற ஆசீருடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.