2013-06-06 16:27:13

மறைமாவட்டத்தின் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அருள் பணிகள் தொடரும் - ஆப்ரிக்க ஆயர் Muñoz


ஜூன்,06,2013. தங்கள் மறைமாவட்டத்தின் பல கோவில்களிலும், துறவு இல்லங்களிலும் உள்ள உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அருள் பணியாளர்களும், இருபால் துறவியரும் அந்நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangassou மறைமாவட்டத்தில் உள்ள பிரான்சிஸ்கன் அருள் சகோதரிகள், தூய ஆவியார் அருள் பணியாளர்கள் என்ற இரு துறவு இல்லங்கள் உட்பட பல கத்தோலிக்க நிறுவனங்கள் கடந்த பல வாரங்களாய் கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றது என்று Bangassou ஆயர் Juan Jose Aguirre Muñoz, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இத்தகையத் தாக்குதல்களுக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல என்றும், திருத்தூதர்கள் இயேசுவுக்காக அடிபட்டதை தாங்கள் அடைந்த பேறு என்று சொன்னதைப் போல, நாங்களும் தற்போதையத் தாக்குதல்களை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஆயர் Muñoz கூறினார்.
மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் இளையோர், பல்வேறு தவறான வழிகளைக் காட்டும் குழுக்களால் தூண்டப்பட்டு, இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை தெளிவுபடுத்திய Comboni துறவுச் சபையைச் சேர்ந்த ஆயர் Muñoz, நாட்டின் முன்னேற்றத்திற்காக தாங்கள் உழைக்க தாயாராக உள்ளோம் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides/ICN








All the contents on this site are copyrighted ©.