2013-06-06 16:26:31

திருஇருதயத் திருநாளன்று தென் கொரியாவில் 600க்கும் அதிகமான அருள் பணியாளர்களும், ஆயர்களும் நடைப்பயணம்


ஜூன்,06,2013. நடைபெறும் நம்பிக்கை ஆண்டையும், ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படும் இயேசு கிறிஸ்துவின் மிகப் புனிதமான திருஇருதயத் திருநாளில், அருள் பணியாளர்கள் புனிதமடைய கடைபிடிக்கப்படும் உலக வேண்டுதல் நாளையும் இணைத்துக் கொண்டாட தென் கொரியாவில் 600க்கும் அதிகமான அருள் பணியாளர்களும், ஆயர்களும் நடைப்பயணமாக திருத்தலங்களுக்குச் செல்கின்றனர்.
இந்த நடைப்பயணம் அருள் பணியாளர்களின் கடமைகளை உணர்த்துவது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் நம்பிக்கையை விதைத்த மறைசாட்சிகளை மக்களுக்கு மீண்டும் நினைவுறுத்தும் ஒரு முயற்சியாகவும் அமைகிறது என்று பேராயர் Andrew Yeom Soo-jung, Fides செய்தியிடம் கூறினார்.
இவ்வெள்ளி காலை 10.30 மணிக்கு Myeongdong பேராலயத்தில் நடைபெறும் திரு நற்கருணை ஆராதனையுடன் ஆரம்பமாகும் இந்த நடைபயணம், Seosomun மற்றும் Saenamteo ஆகிய இடங்களில் அமைந்துள்ள மறைசாட்சிகளின் திருத்தலங்களுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபயணம் முழுவதும் தென் கொரிய மறைசாட்சிகளின் வாழ்விலிருந்து சிந்தனைகள் வழங்கப்படும் என்றும், Seosomun திருத்தலத்தில் நடைபெறும் திருப்பலியுடன் இந்த நம்பிக்கை ஆண்டு நடைபயணம் முடிவடையும் என்றும் Myeongdong உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
இந்த நடைபயணத்தின் ஒரு முக்கியக் கருத்தாக, வட மற்றும் தென் கொரிய நாடுகளின் ஒற்றுமையும், வட கொரிய மக்களின் நல்வாழ்வும் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.