2013-06-06 16:21:07

சிலை வழிபாடுகளை விடுத்து, இறைவனிடம் முழுமையான அன்பு கூர்வதே உண்மைக் கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்லும் - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,06,2013. ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சிறிதாக அல்லது பெரிதாக சிலைகளை உருவாக்கி வழிபடுகிறோம், இச்சிலைகளை விடுத்து, இயேசு சொல்லித்தந்தது போல், இறைவனிடம் முழுமையான அன்பு கூர்வதே உண்மைக் கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்லும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனைய ஆயர்களுடன் ஆற்றிய திருப்பலியில் இறைவனை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு வலிமையோடும் அன்பு கூர்வதே முதன்மையான கட்டளை என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பகுதியை மையமாக்கி மறையுரை வழங்கினார்.
இறைவனை இவ்விதம் முழுமையாக அன்பு கூர்வதற்குத் தடையாக பல போலிச் சிலைகளை நாம் உருவாக்கிக் கொள்கிறோம், அதனால், இறையாட்சியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நம் மனதில் ஒளிந்திருக்கும் பல்வேறு சிலைகளை முற்றிலும் அகற்றி, இறைவனை முழுமையாக அன்பு கூர்வதற்கு இயேசு நமக்குக் கற்பிக்கவேண்டும் என்று அவரிடம் செபங்களை எழுப்புவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.