2013-06-05 16:55:58

துன்பங்கள் மிகுந்துள்ள இடங்களிலிருந்து நாம் விலகிச்செல்ல முடியாது - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,05,2013. எங்கு துன்பம் உள்ளதோ அங்கு கிறிஸ்து பிரசன்னமாகிறார்; எனவே, துன்பங்கள் மிகுந்துள்ள இடங்களிலிருந்து நாம் விலகிச்செல்ல முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஓராண்டுக்கும் மேலாக சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரினால் துயருற்றுள்ள மக்களுக்கு உதவிகள் செய்வது எவ்விதம் என்பது குறித்து கலந்துபேச திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அங்கத்தினர்களை இப்புதன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூட்டத்திற்கு வந்திருந்தோரின் பிறரன்பு உணர்வுகளையும் செயல்பாடுகளையும் பாராட்டினார்.
'சிரியாவில் அமைதி நிலவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்ற சிறப்புச் செய்தியுடன் சென்ற ஆண்டு நவம்பர் மாதம், Cor Unum அவையின் தலைவர் கர்தினால் Robert Sarah அவர்களை, தன் சார்பில் சிரியாவுக்கு அனுப்பி வைத்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்ட அமைதி முயற்சிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்தார்.
"சிரியாவில் ஒரு நல்ல அரசியல் தீர்வு ஏற்பட இன்னும் எவ்வளவு இரத்தம் அங்கு சிந்தப்பட வேண்டும்?" என்று உயிர்ப்பு ஞாயிறன்று 'Urbi et Orbi' உரையில் தான் பகிர்ந்துகொண்ட கவலையை இப்புதன் வழங்கிய உரையில் மீண்டும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவிலும், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் முழுமையான அமைதி நிலவ திரு அவை ஆழ்ந்த ஈடுப்பாட்டுடன் உழைக்கும் என்று கூறிய திருத்தந்தை, தங்கள் பிறரன்புப் பணிகளால் அமைதியை உருவாக்கப் பாடுபட்டு வரும் Cor Unum அவையின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தினார்.
திருத்தந்தை உங்களுடன் பயணிக்கிறார், உங்கள் அருகில் இருக்கிறார், திருஅவை உங்களை கைவிடாது என்ற செய்தியை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் சிரியாவில் வாழும் அனைவருக்கும் ஏந்திச் செல்லவேண்டும் என்ற வார்த்தைகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.


ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.